பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 227 பீகிங், ஷாங்கால், உகான், ஷென்யாங், செங்டு, சியான் போன்ற நகரங்களில் உடல் கலாசாரம் போதிக்கும் ஆசிரியர்களை உருவாக்கும் பயிற்சி நிறுவனங்களை அரசு நிறுவியிருப்பது, அதன் உடற்கல்வி மேல் உள்ள ஆர்வமும் உண்மைப் பற்றும் உள்ளங்கை நெல்லிக் கனியாக அல்லவா தெரிகிறது! * உடற்கல்வி அமைப்புக் குழுவினை ஏற்படுத்தியதுடன் அதில் ஆராய்ச்சிப் பிரிவுகளையும் அமைத்து, சிறந்த உடற்கல்வியைத் தம் மக்களுக்குக் கொடுக்க, சீன அரசு சிறப்பான முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. இதனால் தான் இன்று ஆசியப் போட்டிகளிலே முதல் நாடாகத் திகழ்கின்றது. ஒலிம்பிக் பந்தயங்களிலும் மேலை நாடுகளை அச்சுறுத்தும் அளவுக்குப் போட்டியிட்டுப் பரிசுகளை வெல்கிறது. சீன நாட்டின் உடற்கல்வி மேம்பாடுதான், இன்று உலக விளையாட்டு அரங்கிலே உன்னத நிலையை தோற்று வித்திருக்கிறது. அதன் வெற்றியின் மேன்மையைக் காணும் மற்றநாடுகள், அதன் வெற்றியின் அடிப்படை உண்மையான உடற்கல்வியின் வளர்ச்சிதான் என்பதை அறியும் போது, உடற்கல்வியின் பெருமையையும் நம்மால் நிறையவே புரிந்து கொள்ள முடிகிறது.