பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

\

'உலக நாடுகளில் உடற்கல்வி 25

அடிமைகளுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லை. அந்த நாட்டில் பிறந்த மக்களுக்கே சகலவிதமான சுதந்திர வாழ்க்கைகளும் வழங்கப்பட்டன.

ஏதென்ஸ் நாட்டுத் தலையாய கொள்கையானது தனிப்பட்ட ஒருவன் உடலாலும் மனதாலும் திடமானவனாக வளர வேண்டும். அவர்களது உடற்கல்விக் கொள்கையும் அவ்வழியே தான் ஆக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஏதென்ஸ் நாட்டுக்குடிமகனது வாழ்க்கையை யும், கற்ற கல்வி முறையையும், நாம் நான்கு பகுதிகளாகப் பிரித்து அறிந்து கொள்ளலாம்.

1. குழந்தையும் வீடும்

ஸ்பார்ட்டாவில் ஒரு வீட்டில் குழந்தை பிறந்ததும், அதற்கு வாழத் தகுதியுண்டா, வல்லமை உண்டா, வலுவிழந்ததா என்பதையெல்லாம் அந்த நாட்டு அதிகாரிகள் தாம் வந்து, ஆய்ந்து முடிவு செய்தனர். வலுவானதை வாழவிட்டனர். வலுவற்றதை மரிக்க விட்டனர்.

அத்தகைய அவல நிலை, ஏதென்ஸ் பெற்றோர்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட முடிவினை எடுக்கும் உரிமையை குழந்தையைப் பெற்ற பெற்றோர்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்தது. ஆக, வலிமையான குழந்தைகளை நாட்டுக்காக வழங்கும் வளமான வாய்ப்பையும், தேர்வு செய்யும் உரிமையையும் பெற்றோர்களே பெற்றிருந்தனர்.

பிறந்தது முதல் 7 வயது வரையிலும், குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலேயே வாழவும் வளரவும் கூடிய சிறந்த வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு, பெற்றவர்களிடம் தான் இருந்தது. சில சமயங்களில் தாதியர்கள், அடிமைகள் கூட குழந்தைகள் வளர்க்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர்.