பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

39

நாட்டு மக்கள் நல்ல உடற்கட்டும், உடல் வலிமையும் கொண்டவர்களாக விளங்க வேண்டும். அத்தகைய உடற் கல்வியானது, ஆற்றல் மிகு வீரப்படையை அமைக்க உதவவேண்டும் என்று கூறினார். திறமான உடலும் திறமான மனமும் தான் வெற்றிக்கு வழிகாட்டியாகும் என்கிற கொள்கையை இவர் வற்புறுத்தினார்.

சாக்ரட்டீஸ்:

கிரேக்கக் குடிமக்களில் எவரும் உடற்பயிற்சிகளில் கற்றுக்குட்டியாக (Amateur) அல்லது வெறும்பொழுது போக்குக்காக செய்கின்றவராக இருந்திட, எந்த உரிமையும் கிடையாது. ஆற்றல்மிக்க தேகமாக தன்னுடைய உடலை உருவாக்கி வைத்திருப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும் தொழிலும் ஆகும். இமைக்கின்ற ஒரு நொடியில் தமது நாட்டைக் காக்கப் புறப்படுகின்ற வல்லமை படைத்தவர்களாக மக்கள் விளங்கவேண்டும்.

பழக்கப்படாத, பயிற்சி செய்யாத ஒரு குடிமகனால் போர்க்களத்தில் நாட்டுக்கு எத்தனை அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது? ஒருவன் தனது உடலில் எவ்வளவு சக்தியிருக்கிறது. எப்படிப்பட்ட அழகு நிறைந்திருக்கிறது என்று அறிந்து கொள்ளாமல் வெறுமனே இருந்து முதுமையடைந்து போவது எவ்வளவு பெரிய அவமானம்? எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உடல் வலிமையால் உச்சக் கட்டத்தை அடைந்து உயர்ந்த நிலையைப்பெற ஒவ்வொருவரும் முயலவேண்டும்.

ஆழ்ந்து சிந்திக்கும்பொழுது கூட, ஆற்றல்மிகு தேகத்தினால், குறைந்தநேரமே பயன்படுத்த நேரிடுகிறது. இதனால், பொதுவான ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்வது என்னவென்றால், நிறைந்த தவறுகள் எல்லாம் நலமிழந்து கிடக்கிற உடலில்தான் நிறைய விளைகின்றன.