பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் உடற்கல்வி

41

வேண்டும். இராணுவத்தில் பயன்படும் கனமான உடை களையும் கவசங்களையும், ஆயுதங்களையும், உடலில் ஏற்றிக்கொண்டு ஓட்டம், வில்வித்தை, குதிரையேற்றம், கைகளால் குத்துச் சண்டை போடுதல் போன்றவைகளில் இளைஞர்களைப் பழக்கினால், இராணுவ வல்லமை எல்லாருக்கும் நிறையும். அப்படிப்பட்ட வாழ்க்கை முறையே அமைய வேண்டும் என்று பிளேட்டோ தனது ரியப்ளிக் என்ற நூலில் கூறுகின்றார்.

அரிஸ்டாட்டில்:

மற்றவர்கள் வழியிலிருந்து சற்று மாறி நின்ற மாமேதையாகத் தோன்றுகிறார் அரிஸ்டாட்டில்.

உடலும் மனமும் ஒன்றுக்கொன்று உறவுடையதாக, ஒற்றுமை கொண்டதாக, ஒன்றையொன்று தாங்கி, சார்ந்து ஒற்றுமையாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால், உடலுக்குத் தருகின்ற கல்வியானது, மனதை விரிவுபடுத்தி, அறிவை ஆற்றல் மிக்கதாக வளர்த்திடவேண்டும் என்ற கொள்கையை வற்புறுத்தினார். வலியுறுத்தினார்.

கடுமையான உடற்பயிற்சிகளும், கொடுமையான உணவுக்கட்டுப்பாடும், குழந்தைகளுக்குக் கூடவே கூடாது. இவை இரண்டும் குழந்தைகளது வளர்ச்சியைக் கெடுப்பதுடன், வாழ்க்கையையும் வீணாக்கிவிடும். எளிமையான உடற்பயிற்சி, மகிழ்ச்சிதருகின்ற விளையாட்டுக்கள் வேடிக்கையை விளைவிக்கும் கூடியாடும் ஆட்டங்கள் போன்றவை குறிப்பாக 14 அல்லது 15 வயது வரை, குழந்தைகளுக்கும் கற்பிக்கவேண்டும் என்பதில் அதிகமான அக்கறை காட்டினார்.

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகளும், உடற்பயிற்சிகளை குறைந்த அளவு செய்வதும் தேகத்திற்குத் தீங்கு விளைவிப்பனவாகும் என்றார் அரிஸ்டாட்டில்.