பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஹீப்போகிரேட்ஸ்

மருத்துவ மேதையாகத் திகழ்ந்தவர் ஹிப்போகிரேட்ஸ், அளவான உடற்பயிற்சியானது, உடலின் பலவீனத்தைப் போக்கும். நோய்களை அகற்றும், அதே சமயத்தில் கடுமையான உடற்பயிற்சிகள், உடல் உறுப்புக்களுக்கு அபாயத்தையும், தள்ளாடி தளர்ந்து போகும் தீங்கினையும் விளைவிக்கும் என்று தம்மை நாடி வந்த நோயாளிகளிடம் கூறினார்.

நலமான உடல் பெற, அளவான உடற்பயிற்சியே வேண்டும் என்பது இம் மருத்துவமேதையின் கணிப்பாகும்.

கேலன்:

இவர் சிறந்த மருத்துவராவார். உடல் அமைப்பின் ரகசியத்தை, உண்மை நிலையைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். சிறந்த மருத்துவர் ஒருவர் சிறந்த ஜிம்னாஸ்டிக் ஆசிரியராகவும் விளங்க முடியும் என்ற சித்தாந்தம் உள்ளவராக விளங்கினார்.

அந்த அடிப்படையிலேயே அவர் ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் ஒவ்வொரு வகையான உடற்பயிற்சிகள் என்று தரம் பிரித்துக் காட்டினார். அதாவது கால்களுக்கு, கைகளுக்கு, மார்புக்கு, வயிற்றுத் தசைகளுக்கு என்று தனித் தனிப் பயிற்சிகளாகத் தொகுத்துத் தந்தார்.

கடுமையான உடற்பயிற்சிகளே நடமாடிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், விரைவான பயிற்சிகள், என்றும், எதிர்த் தடுப்பு தரும் பயிற்சிகள் (Resistance Execercise) என்றும், கடுமையான பயிற்சிகள் என்றும் வகைப்படுத்திக் காட்டிய வல்லவராகவும் இவர் விளங்கினார்.