பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

7


மரபுகள், சமூகத் தத்துவங்கள், வாழ்க்கைக் கொள்கைகள் எதுவாக இருந்தாலும், இந்த இரண்டு நாடுகளும் முரண்டு பிடித்துக் கொண்டு, முற்றிலும் வித்தியாசமானதொரு வாழ்க்கை அமைப்பையே பிடிவாதமாகக் கொண்டு, பெருவாழ்வை வாழ்ந்து காட்டின.

அதாவது, ஏதென்ஸ் நகரம், தனது மக்களுக்கு முழு வாழ்க்கைச் சுதந்திரத்தை வழங்கியிருந்தது. ஆனால், ஸ்பார்ட்டா நகரமோ, அந்நாட்டு மக்களை நாட்டுக்கு அடிமையாக ஆக்கி, நாட்டுக்காகவே வாழச் செய்தது, (விளக்கம் பின் பகுதியில் காண்க).

எப்படியிருந்தாலும், கிரேக்கர்கள் எதிலும் அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவர்களாக, எந்தக் காரியத்திலும் நுணுக்கம் உள்ளவர்களாக, எதையும் புதிதாகப் படைத்து, சுவைத்து மகிழும் கலை உணர்வு நிறைந்தவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.

மக்களும் வாழ்க்கையும்

கிரேக்கர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வினை நடத்தினர். இயற்கையழகு, செவி சுவைக்கும் ஒலி, கண் மகிழும் நிறம்; உள்ளம் கவரும் ஒளி, இயற்கை சொரியும் இனிமை கலந்த காட்சி அமைப்புகள்; இவற்றிலெல்லாம் அவர்கள் தங்கள் மனதையும் அறிவையும் பறிகொடுத்து, பேரின்பகரமான வாழ்வு வாழ்ந்தனர்.

இவற்றின் எழுச்சியால் பெற்ற உணர்ச்சியால், அவர்களிடையே கவிதை பிறந்தது. கலைகள் எழுந்தன. நாடகங்கள் தோன்றின. நாட்டியங்கள் உண்டாயின. இசை முழங்கியது. பேச்சாற்றல் பெருக்கெடுத்தது. சிற்பவேலைகள் செழித்தோங்கின. கணக்கு நுணுக்கங்கள் கரைபுரண்டன. வான சாஸ்திர உணர்வும், வீர வேட்கையும் வெற்றிப் பெருமிதமும் உலகில் விழா எடுத்து மகிழ்ந்தன.