பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



தரும நெறி மாறியபோது, செல்வமானது தலைமையிடத்தைப் பெற்றது. அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறினர். படாடோபத்துடன் பெருமை நிறைந்த கர்வத்துடனும் வாழ்ந்தனர். ஆனால் ஏழைகள் ஏழைகளாக மாறி, இடறிலும் இன்னலிலும் வாழ்க்கையில் தாழ்ந்து போயினர். அதனால் சமுதாயத்தில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இடைவெளியானது தோன்றின.

நீதி போதனைகள் நிலைபெயர்ந்தன. சமுதாய அமைப்பின் அடிபீடம் சரியத் தொடங்கியது. சில சமயங்களில் தகர்த்தெறியப்பட்டது. அங்கே அறிவுக்கு உயர் மதிப்பு கிடைக்கத் தொடங்கியது. வசதியுள்ளவர்கள் தங்கள் பெண்களுக்கு வீட்டிலே ஆசிரியர்களை வாடகைக்கு வரவழைத்துப் பாடம் கற்றுக் கொள்ளச் செய்தனர். பெண்களின் கல்விக்கும் அறிவுக்கும் பெரிய மரியாதை ஏற்பட்டது. உடல் வலிமையை விட, அறிவு வலிமையையே,அம்மக்கள் ஆதரித்தனர்.

வலிய உடல் வாய்ப்பிழந்தது

இதற்கும்மேலாக, இன்னொரு இழப்பு இடம்பெற்றது. ஒவ்வொரு குடிமகனும் உரம் வாய்ந்த உடலோடு உள்ளவனாக இருந்தாக வேண்டும் என்பது மாறிப் போயிற்று. நாட்டு இராணுவத்தில் வீரனாக இருந்து சேவை செய்யும் விதிமுறைகளும், மாறிப் போயின. குடிமக்கள் எல்லோரும் இராணுவத்தில் இடம் பெறும் உரிமையை இழந்து போக, சம்பளம் வாங்கிக் கொண்டு இராணுவத்தில் பணியாற்றுகிற அமைப்பு ஒன்று உருவாகியது. சம்பளத்திற்காகவே மக்கள் இராணுவத்தில் சேர்ந்தார்கள். இதனால் வலிமையான நல்ல உடலைக் காக்கும் மரபிலிருந்து, மக்கள் விடுபட்டுப் போயினர்.