பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

உலக வரலாற்றில்



இராணுவ வீரர்களிடம் பேசும் போதும், உணவு உண்ணும்போதும், பயிற்சி பெறும்போதும், தனது நாட்டின் அவலநிலைகளையும், பரூக் மன்னனின் பேதைத்தனமான சீரழிவுகளையும் எடுத்துக் கூறி, சிறுகச் சிறுக அவர்களது மனதிலே தேசிய உணர்வு என்ற விதைகளை விதைத்து வந்தார் நாசர்

அதனைப்போலவே, அவர் தனது தேசபக்திக் கருத்துக்களைப் புனைப்பெயரில் கட்டுரைகளாக்கி பத்திரிகைகளிலே வெளிவரச் செய்வார்! அதனால் இவரது உணர்வுகளை யாரோ ஒருவர் எழுதுகிறார் என்ற எண்ணத்தில் பத்திரிகைகள் வெளியிடும்!

அதே கருத்துக்களை எகிப்திய குக் கிராமத்து மக்கள் எல்லாம் படிக்கும் படியான உணர்ச்சி ஒட்ட மொழியாலே ஓர் எழுச்சியை உருவாக்கியபடி எழுதினார் நாசர்!

இரண்டாவது உலகப்போர் 1942-ஆம் ஆண்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் நடுநிலை நாடாக இருந்த எகிப்து நாடு, பிரிட்டிஷ் நரித்தந்திர சூழ்ச்சியால் நேச நாடுகளின் பிணைப்பிலே சேர்க்கப்பட்டது.

பிரிட்டன் ஏன் இவ்வாறு எகிப்து நாட்டைப் போர்ச் சூழலிலே சிக்க வைத்தது என்றால், சூயஸ்கால்வாய் கப்பற்படைப் போக்குவரத்து முக்கியத்துவம் பறிபோய் விடக் கூடாதே என்ற காரணத்தால் பிரிட்டன் தனது நேச நாடுகள் அணியிலே எகிப்து நாட்டையும் சேர்ந்துக் கொண்டது.