பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

21


வரலாறு, சட்டம் ஆகிய மூன்று கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். 1831ஆம் ஆண்டில் தத்துவப் பேராசிரியர் பட்டத்தைப் பெற்றார். பான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிய வேண்டும் என்பது அவருடைய ஆசை. ஆனால் அதற்கேற்ற சூழ்நிலை அமையவில்லை. அதனால் எண்ணத்தை விட்டுவிட்டார். அதற்குக் காரணம் இருந்தது.

அன்றைய அரசு, மக்கள் பேச்சுரிமை, எழுத்துரிமைகளுக்கு விரோதமாக இருந்தது.சுருங்கச்சொன்னால் மக்கள் அறிவு வளர்ச்சி பெறுவதையே அரசு விரும்பவில்லை. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அரசு விருப்பம்போல் ஆடும்படி அடிமைப்படுத்தப்பட்டனர். சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை.இந்தக் காரணத்தால்தான் காரல் மார்க்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் எண்ணத்தைக் கைவிட்டார்.

அதிசயிக்கத்தக்க அறிவும், ஆராய்ச்சித்திறனும், உரிமை உணர்ச்சியும் கற்றவராக காரல் மார்க்ஸ் திகழ்ந்தார். அதைக் கண்ட அவருடைய தந்தையார் இவ்வளவு திறமைமிக்க தன் மகன் அடிமை வேலையில் ஈடுப்படக்கூடாது என்று எண்ணினார். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். 1838-ல் தன் தகப்பனார் இறந்தபின், காரல் மார்க்ஸோ குடும்பச்சுமையை சுமந்தார். கோலூன் என்னும் இடத்தில் புதிய செய்தித்தாளை ஒருவர் துவங்கினார். மார்க்ஸ் அதற்கு கட்டுரைகள் எழுதினார். அதனால் அவருடைய பெயரும், புகழும் நாடெங்கும் பரவின.சிலமாதங்களுக்கு பிறகு அவர் பதிப்பாசிரியர் ஆனார்.