பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

51


கிடைத்த உலகப் பரிசு என்று கூறலாம். ஐக்கிய அமெரிக்கா நாட்டில் இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்து மார்ட்டின் லூதர்கிங் போராடினார். அதன் விளைவாக இன ஒதுக்கல் கொள்கையை சட்டவிரோதமானது என சிவில் உரிமை அமெரிக்க அரசினால் 1964-ல் சட்டமாக்கப்பட்டது.இந்தச் சமாதான் பணியின் தலைவர் என்ற காரணத்திற்காக அவர் நோபல் பரிசு பெற்றார்.

அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்றவர்களின் வரிசையில் கிங் 14-ம் இடத்தில் இருக்கிறார். நீக்ரோ சமுகத்தினரின் இரண்டு பேர் மட்டுமே இந்த பரிசை பெற்றிருக்கிறார்கள். அவர்களில் இரண்டாம் நபர் நம்முடைய கிங்.

அமெரிக்காவில் ஜியார்ஜியா அட்லாண்டா நகரில் லூதர் கிங் பிறந்தார். இவருடைய தந்தை அந்த வட்டார கிருத்துவ தலைவர், மகனும் தன்னைபோலவே ஒரு மதகுருவாக விளங்கவேண்டும் என்பது தந்தையின் விருப்பம். அந்த எண்ணத்தில் லூதர் கிங் பாஸ்டன் பல்கலைக் கழத்தின் கிருத்துவ மதத் தத்துவங்களைக் கற்று 1954-ம் ஆண்டில் சமயத்துறைக்கான டாக்டர் பட்டம் பெற்றார்.

நீக்ரோ மக்கள் படும் தொல்லைகளையும் அனுபவிக்கும் கொடுமைகளையும் கண்ணாரக் கண்டு அவர் அடிமைத்தனத்தை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டார். இதன் காரணமாக மதத்தலைவராகப் பயிற்சி பெற்ற கிங் மக்கள் தலைவரானார்.