பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

64


சுதந்திரத்தின் அழியாச் சின்னம்
ஆபிரகாம் லிங்கன்!

பாரதப் பூமியின் சுதந்திரத் தந்தை காந்தியடிகளாரைப் போல, அமெரிக்காவின் சுதந்திர பூமியின் அழியாச் சின்னமாக விளங்கியவர். ஆப்பிரகாம் லிங்கன்!

மகாத்மா காந்தியடிகள், கத்தியின்றி ரத்தமின்றி வெள்ளையனை எதிர்த்துப் போர் தொடுத்து சுதந்திரம் பெற்றுத்தந்தார் நமது இந்தியாவுக்கு. ஆனால், பெற்ற சுதந்திரத்தை அமெரிக்க மக்கள் பகிர்ந்து அனுபவிக்க அரும்பாடுபட்டு வெற்றிமுரசு கொட்டியவர் என்ற புகழுக்குக் காரணமாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன்.

மக்களுக்கு, மக்களுக்காக, மக்களால் ஆளப்படும் ஆட்சியே உண்மையான ஒருமக்கள் ஆட்சி என்ற தத்துவத்துக்காக, தான் சுடப்பட்டுச் சாகும்வரை உழைத்தவர் அவர்.

இவ்வாறான மக்கள் சேவைகளில் காந்தியடிகளுக்கும், அமெரிக்க மனித சுதந்திரச் சிற்பி ஆபிரகாம் லிங்கனுக்கும் ஒற்றுமை இருப்பதை அந்த இரு மேதைகளின் மக்கள் தொண்டுகளில் நாம் காணமுடிகின்றது. அதுபோலவே, அந்த மாபெரும் இன விடுதலை வீரர்கள் இருவரும் கொலை வெறியர்கள் இருவரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி. சாவிலும் ஒற்றுமையை நிலைநிறுத்திய மாவீரர்களாக மக்களால் போற்றப்படுகின்றார்கள்.