பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

உலக வரலாற்றில்



ஐப்பான் தாக்கியது பர்மாவை. தாக்குப்பிடிக்க முடியாத பிரிட்டன் பிடரியில் அடிப்பட்ட சிங்கம் போல ஓடியது! இதனால், பர்மாவை ஐப்பான் போரில் பிடித்துக் கொண்டு வெற்றிக்கொடி நாட்டியது!

உடனே ஐப்பான் ‘நூ’வையும், அவரது புரட்சிப் படையினரையும் விடுதலை செய்தது. ‘நூ’ கேட்டுக்கொண்டபடி ஐப்பான் அப்போது ஓர் இடைக்கால அரசை அமைத்தது. இந்த அமைச்சரவையில் ‘நூ’ அயல்நாட்டு மந்திரி என்ற பொறுப்பை ஏற்றார்

பிறகு ஐரோப்பாவிலே உள்ள இட்லர், முசோலினி ஆகியோர் நேசநாடுகளிடம் தோல்வி கண்டதால், ஐப்பானியரும் பர்மாவில் நடந்த பிரிட்டிஷ் ஐப்பான் யுத்தத்தில் தோற்றுவிட்டனர், மீண்டும் பிரிட்டன் பர்மாவைப் பிடித்து வெற்றிபெற்றது.

வெள்ளையர் வெற்றி பெற்றார்களே தவிர, மறுபடியும் பர்மிய மக்களை அடக்கி ஆள்வது முடியாத செயல் என்பதைத் திட்ட வட்டமாக உணர்ந்ததால் பர்மாவுக்குச் சுதந்திரம் வழங்க முடிவு செய்தனர்!

அப்போது ‘ஊ அவுங்சான்’ தலைமையில், பாசிச எதிர்ப்பு முன்னணிக்கட்சி என்ற ஒரு கட்சி பர்மா சுதந்திர ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தது. நாட்டின் அரசியல் சட்டத்தை எழுதும் ஓர் அரசியல் நிர்ணய சபைக்கு ‘நூ’தலைவரானார்!