பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணாரக் காணும் காட்சி

59



அநுபவம் வர வழி

வர்கள் அநுபவிக்கின்ற அநுபவம் நமக்குக் கிடைக்கிறது இல்லையே. ஏன்? பார்க்கும் திசைதொறும் எம்பெருமாட்டியின் எழில் உருவத்தைக் காணவேண்டுமானால் அதற்கு ஒரு பக்குவம் வேண்டும். அருணகிரிப்பெருமான், "என் உள்ளம் குளிரக் குதிகொண்டவே" என்று முன்பு சொன்னார். அந்த நிலையே நமக்கு வரவில்லை. அதற்கு மேற்பட்ட நிலையை அல்லவா இப்போது நாம் கேட்கிறோம்? இத்தகைய நிலைகள் நமக்கு வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அதை அபிராமிபட்டர் வேறு ஒரு பாட்டில் சொல்கிறார்.

"வெளிநின்ற நின்திரு மேனியைப் பார்த்தென்
விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை;
கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானந் திகழ்கின்றது; என்ன
திருவுளமோ;
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி
உறைபவளே."

'ஆகாசமாக இருந்த இடத்தில் உன் திருமேனி தோன்றியது. அதைக் கண்டு முதலில் என் விழியும், என் நெஞ்சும் நிரம்பி ஆனந்தம் பொங்கி வழிகிறது. அதற்கு எல்லையே இல்லை. அந்த ஆனந்த வெள்ளத்திற்குக் கரை கட்ட முடியவில்லை. நீ என் கருத்தில் நிறைந்திருந்தாய். இப்போது புறவெளி எல்லாம் காட்சி அளிக்கிறாய். அப்படி வெளி நின்ற திருமேனியைப் பார்க்கும்போது என் விழியும், நெஞ்சும் ஆனந்தம் நிரம்புகிறது. அந்த ஆனந்தத்திற்குக் காரணம் என்ன தெரியுமா?

"கருத்தினுள்ளே

தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது; என்ன திருவுளமோ?"