பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

உள்ளம் குளிர்ந்தது

கொண்டிருக்கிறான் என்றும் சொல்வது உலக வழக்கு. துவஜம் கட்டுவது என்பது பெரும்பாலும் பொல்லாததை அழிக்கும் வீரத்தைச் சுட்டி நிற்கிறது. முருகப்பெருமான் திருத்தணி மாமலையில் சேவல் கொடியைக் கட்டியிருக்கிறான். அடியார்களுக்குத் தீங்கு செய்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் யாவரையும் அழித்துவிடுவேன் என்று துவஜம் கட்டிக்கொண்டிருக்கிறான். அந்தத் துவஜந்தான் சேவல். அதனுடைய பெருமையைக் கந்தர் அலங்காரத்தில் பல இடங்களில் நாம் பார்த்தோம்.

குக்குடத் துவஜன் ஆகிய ஆண்டவன் திருத்தணி மாமலையில் வாழ்கிறான். பூவுலகத்தில் உள்ள மலையில் அவன் துவஜம் கட்டிக்கொண்டு வாழ்ந்தாலும் அவன் தேவலோகத்திலுள்ள தேவர்களுக்கும் தலைவனாக இருக்கிறான். தேவர்கள் தம்முடைய தலையில் மாணிக்கத்தைப் போல அணிந்து வழிபடுகிற பெருமான் அவன். அப்படி இருந்தும் ஆருயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு இந்த உலகத்திற்கு எழுந்தருளி வந்து குளிர்ந்த குழ்நிலையை உடைய திருத்தணி மாமலையில் அவன் வாழ்கிறான்.

வள்ளியெம்பெருமாட்டியை மணந்து கொண்ட இடம் இந்தத் திருத்தணி மாமலை மணத்திற்கு ஏற்றவளமுடைய மலை அது. தேவர்களுக்குச் சிகாமணியாக இருக்கிற பெருமான், தேவலோகத்தில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டாலும் அதைவிடச் சிறந்த கல்யாணம் ஒன்றைத் திருத்தணிகையில் பண்ணிக்கொண்டான். அது அவன் பெரும் கருணையைக் காட்டுகிறது. "தேவர்களுக்கு எல்லாம் சிகாமணியாக இருக்கிறவனே, திருத்தணி மாமலையில் வாழும் சேவற் கொடி உடையானே, இந்த உயிருக்கு மோசம் வருமே, மரணம் வந்துவிடுமே என்று பயந்து, அதுகாரணமாக உன் திருவடிகளைச் சேவிக்கின்ற நினைப்பு இல்லாமல் இருக்கிறேனே? முன்னைப் பிறவியில்