பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உழைப்பால் உயர்ந்த ஒருவர்
முன்னுரை

அடிமையிற்பிறந்து, அறியாமையில் தவழ்ந்து. வறுமையில் வளர்ந்து, இடுக்கண் பலவற்றைப் பொடியாக்கி, பிறந்த குடியை உயர்த்து நிறுத்திய பெரியாருள் ஒருவர் தி வாஷிங்குடன் (Booker T. Washington) என்பவர்.

’அல்லல் ஒரு காலம்: செல்வம் ஒரு காலம்’, அடுத்து முயன்றால் ஆகாதனவும் ஆகும். ’முயற்சி பலன் தரும்’. 'உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? ’பிறப்பினால் உயர்வு தாழ்வு அளக்கப்படாது’ என்பன போன்ற பல நீதிகளை விளக்குகின்றது அவரது வாழ்க்கை வரலாறு. கைத்தொழிலின் அழகையும் பெருமையையும் ஊதியத்தையும் உணர்த்துகின்றது இச்சரித்திரம். புத்தகப் படிப்பும் கைத்தொழிற்படிப்பும் ஒருங்கே தரப்படின், மாணவரெல்லாம் தாம் படித்த கலாசாலையின் பெருமையையும் பயனையும் உலகிற்கு எக்காலும் காட்டிக்கொண்டிருப்பர் என்பதற்கு அவர் நிறுவிய டஸ்கிகீ (Tuskegee) கல்லூரியின் மாணவர்களே சான்று. இடிந்து கிடந்த சந்தைக் கூடத்தில் ஒரு டாலர் காசின்றி 30 மாணவர்களோடு புக்கர் தொடங்கிய பள்ளிக்கூடத்திற்கு இலட்சக் கணக்கான பனம் சேரப் பெற்று, ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்குக் கல்வி பெறுகிறார்கள் என்றல் புக்கர் வாஷிங்குடன் செய்த அரிய தொண்டின் அளவினை ஒருவாறு உணர்ந்துகொள்ளக்கூடும்.