பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் அரிய தொண்டு

69

வருவார். பிறகு, மெல்ல மெல்லப் போர்வைகளும் மெத்தைகளும் பலகைகளும் அமைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டன. தொடக்கத்தில், தச்சு வேலை தெரிந்த மாணவர் சிலரே இருந்தனர். அவராற் செய்யப்பட்ட மஞ்சங்கள் சில நாளில் ஒடிந்துபோய்க் கிடந்த காட்சியைப் புக்கரே கண்டிருக்கிறார். ஆனால், விடாது முயன்று நாளடைவில் நல்ல மஞ்சங்கள் செய்யப்பட்டன. அடியிற்போடும் மெத்தைகளும் அங்கே தைக்கப்பட்டன. முதலில் முக்காலிகளும், பின்னர் நாற்காலிகளும் செய்யப்பட்டன. இங்ஙனம் செய்யப் பட்ட மரச்சாமான்கள் மாணவர் நலத்திற்கு ஆயின. பின்னர் ஊருக்கும் அவை உதவப்பட்டன.

டஸ்கிகீயின் பெருமையை என்னென்பது! அடுத்து முயன்றால் ஆகாதனவும் ஆகும் என்று காட்டி நிற்கும் நிலையங்களுள் தலை சிறந்தது அது. ஆங்குக் கற்கும் மாணவர் புறத்தூய்மை நீரானும், அகத் தூய்மை வாய்மையானும் அமையப் பெறுகின்றனர். 'உலகம் வறுமையை மன்னிக்கும் அன்றி, அழுக்கை மன்னிக்காது,' என்ற நல்லுரையைப் பெறுகின்றனர், நேரிய முறையில் உண்ண வும் உறங்கவும் அறிகின்றனர். துணிகளை மாசின்றி அணிய அறிந்துகொள்கின்றனர். அவர் புனைந்திருக்கும் எச்சட்டையிலுங் கிழிந்த இடம் இராது : பொத்தான் போயிருக்காது.