பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

வந்திருந்தனர். தென்றிசை வெள்ளையர்கள் ஆங்கு வந்திருந்ததன் காரணம், புக்கர் அவர்களை எங்ஙனம் இழித்துரைப்பார் எனக் காண்பதற்கேயாகும். ஆனால், புக்கரா வசைப்புராணம் பாடுபவர்! குற்றங்காணிற் குற்றஞ் செய்தோர் முன்னிலையில் எடுத்துக் காட்டித் திருத்த முயல்வரேயன்றித் தெற்கே செய்யப்பட்ட பழந்தீமைகளைப்பற்றி வடக்கே சென்று தூற்றார். ஆதலின், புக்கர் ஆங்குச் சொன்னதெல்லாம், வெள்ளையரும் நீகிரோவரும் ஒத்து வாழ வேண்டுமென்பதும், அதற்குரிய வழிகளில் இரு சாராரும் முயலவேண்டுமென்பதும் ஆம். நீகிரோவர் தமது திறமையாலும் அறிவாலும் குணத்தாலும் அவ்வினத்தாருக்கு இன்றியமையாதவர் என்பதைக் காட்டுவதைப் பொறுத்தே அவரது முன்னேற்றம் நிகழும் என்று கூறி, அவர்களைப் பிறர்க்குப் பயன்படும் பொருள்கள் இயற்றுமாறு. வேண்டினார். பிறரினும் நன்றாக ஒன்றைச் செய்ய அறிந்தவன், எக்குடிப் பிறந்தானாயினும், எவ்வூரில் தோன்றினானாயினும், மேன்மையுறுவது ஒருதலை எனப் புக்கர் கூறி முடித்தார்.

மேடிசனிற் புக்கர் புரிந்த விரிவுரை அவருக்குப் பேரும் புகழுந் தருவதாயிற்று, அது முதல் பல அழைப்புக்கள் அவருக்கு வந்தன. அவர் தென்றிசை வெள்ளையர் முன்னிலையிற் பேச ஒரு வாய்ப்பு அமைதல் நல்-