பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாவின் தொழிற்சங்கப் பணி


தமிழ்நாட்டில் உறங்கிக்கிடந்த தொழிலாளர்களைத் தட்டியெழுப்பி அவர்களுடைய நலன் காக்கும் உற்ற தோழராய் உழைத்தவர்களில் தமிழ்த் தென்றல் திரு. வி. க, திரு. பி. பி. வாடியா, திரு. வி. சக்கரைச் செட்டியார் முதலானோரைத் தலைசிறந்தவர்களாகக் குறிப்பிடலாம். அவர்களுடைய வரிசையில் நீங்காத இடம் பெற்றவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு. சி. பாசு தேவ் ஆவார்.

திரு. பாகதேவ் ஆங்கிலத்தில் அழகு நடையில் பேசுவார். ஆனால் தமிழில் பேசத்தெரியாது. அதனால் அவர் தொழிலாளர் கூட்டங்களில் ஆற்றும் ஆங்கிலச் சொற் பொழிவுகளை அழகுத் தமிழில் இனிமை சொட்ட மொழி பெயர்த்துப் பேசும் ஆற்றல் மிக்கவராக பேரறிஞர் அண்ணா இருந்தார்கள். இதனால் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்திலேயே தொழிலாளர் நெஞ்சங்களில் தனி இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டார்கள்.

திரு. பாசுதேவ் ஆங்கிலத்தில் பேசினால் திரு. அண்ணாதுரை தாம் மொழிபெயர்ப்பார்--என்ற அளவில் வெறும் மொட்டாக அரும்பிய அவர்களுடைய தொடர்பு மலர்ந்து மணம் வீசி இணை பிரியா நட்பாக மாறியது.

1934ல் எம்.ஏ. பட்டம்பெற்று வெளிவந்தார் அண்ணா. வீட்டார் அண்ணாவை ஏதேனும் ஓர் அரசாங்க வேலையில் அமர்த்த வேண்டும் என்பதிலே ஆர்வங்காட்ட, அண்ணாவோ அரசியலில் ஆர்வங் காட்டி வந்தார்கள். திரு. பாசுதேவ் அவர்களிடம் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக அண்ணா அவர்கள் முதன்முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

தொழிலாளர்களின் நிலை உயரவேண்டும்; அவர்களிடையே ஒற்றுமை நிலவவேண்டும்; தொழிற்சங்கம் வலுப்பெற வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டு 1934-35-36 ஆம் ஆண்டுகளில் அயராது பாடுபட்டார்கள். அப்போது திரு. பாசுதேவ், திரு. ஆல்பர்ட் ஜேசுதாசன் ஆகியவர்களோடு சேர்ந்து தொழிற்சங்கப் பணி புரிந்து வந்தார்கள். தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் அந்த நாட்களில் காங்கிரசில் பணியாற்றிய திரு. என்.வி. நடராசன் அவர்களுக்கும், அண்ணா அவர்களுக்கும் தொடர்பு உண்டு ஆனால் அரசியலில் இருவரும் எதிர் எதிர்க் கட்சியினர்.

அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் மாநாடு. லட்சுமணபுரியில் திரு. ஜம்னாதாஸ் மேத்தா அவர்கள்