பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அண்ணா அவர்கள் திரு. ஆல்பர்ட் ஜேசுதாசன் போன்றவர்களோடு, பிரதிநிதியாகச் சென்றிருந்தார்கள். சென்னைத் தலைவர்கள், மாநாட்டில் அண்ணாவுக்குரிய இடம் அளிக்காமல் தங்கள் பின்னால் ஓடிவரக்கூடிய ‘ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி' போல நடத்தினார்களாம். மாநாட்டுத் தலைவர்களிடம் அண்ணா அவர்களை அறிமுகம் செய்து வைப்பதையும் ஒரு பொருட்டாகக் கருதவில்லையாம்.

மாநாட்டில் அண்ணா அவர்கள் ஒரு தீர்மானத்தின் மீது சிறிது நேரம் பேச வேண்டிய வாய்ப்புக் கிடைத்ததாம். மாநாட்டினர் அண்ணா அவர்களின் பேச்சில் ஒன்றித் திளைத்து, மகிழ்ந்து, தணியாப் பற்றுக் கொண்டு விட்டனராம். பிறகு மாநாடு முடியும்வரையில் தலைவர்கள் அண்ணாவைக் கண்டு பேச விரும்புவதும், தொண்டர்கள் அண்ணாவின் பின் ஓடுவதும் ஆன காட்சிகள், மற்றைய சென்னைத் தலைவர்களை இருந்த இடம் தெரியாமல் மறக்கடித்து விட்டனவாம்.

மாநாட்டின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அண்ணா அவர்களின் கருத்துக்கு நல்ல மதிப்பும், செல்வாக்கும் இருந்தன. அந்த மாநாட்டில் அண்ணாவின் ஆற்றலை அறிந்து அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரசின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

இப்படிப் படிப்படியாக அண்ணாவின் தொழிற் சங்கப் பணி வளர்ந்து வந்தது. அதனால் தாமாக உழைக்கும் வர்க்கத்திடையே அண்ணா அவர்கள் தனிச்செல்வாக்கைப் பெற்றார்கள். "பாடுபட்டவன் உடம்பிலே சேறு இருக்கிறது. பாடுபடாதவன் உடலிலே சந்தனம் இருக்கிறது. நியாயமா?" என்று வினா விடுத்தார்கள். இது உழைக்கும் வர்க்கத்தினை உணர வைத்துச் சிந்திக்க வைத்தது.

தொழிற்சங்கக் காங்கிரசில் ஈடுபட்டுத் தொழிலாளர்களுக்குப் பணியாற்றிய அறிஞர் அண்ணாவை நேரடி அரசியலில் ஈடுபடும்படி செய்தவர்கள் 'ஜன்டிஸ் ஆங்கில ஏட்டின் பொறுப்பாளர் திரு. டி.ஏ.வி. நாதன் அவர்களும் 'சண்டே அப்சர்வர்' ஆங்கில ஏட்டின் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களும் ஆவார்கள். அதன் பின் அண்ணா அவர்கள் நேரடி அரசியலில் ஈடுபட்டார்கள். அதன் பின்னும் கடைசி வரையிலும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு உழைத்து, தொழிலாளியின் தோழனாக மறைந்தார்கள்.

(மறைந்த திரு காட்டூர் கோபால் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த "உழைப்பாளி" இதழில் கோ. குலோத்துங்கன் 31-7-74இல் எழுதிய கட்டுரை)