பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. தமிழகத்தின் தொழிற்சங்க வரலாறு

உலகிற்கே பாடமாக அமையக் கூடிய தமிழ்நாட்டின் தொழிற்சங்க வரலாறு தொகுப்பு நூலாக வெளிவருவது அவசியம் -

அண்ணா வலியுறுத்தல்

தொழிற்சங்க வரலாறு மிகவும் முக்கியமானதாகும்; தமிழகத்தில்--உலகிற்கே பாடமாக அமையக்கூடிய பல அரிய தொழிற்சங்கப் போராட்டங்கள் நடந்துள்ளன; இவற்றையெல்லாம் பற்றி ஒரு தொகுப்பு நூல் வெளியிட வேண்டும்.

விரும்பத் தகாதவற்றை விடுத்து--வேண்டியதை மட்டுமே இதில் சேர்க்கவேண்டும். எதிர்காலத்திற்கு இது வழிகாட்டியாக அமையும்.

—'இந்து' இதழ் தொழிலாளர்களிடையே ஆற்றிய உரையில்.


2. மே தினம் பூத்தது !

ளமையினருகே வறுமை, பலத்தினருகே பயம் இது ஏன்? இந்தக் கேள்வி சாதாரண மக்களையல்ல, கருத்துலகின் காவலர்களாக விளங்கியவர்க ளனைவரையும் கதிகலங்க அடித்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளேட்டோ என்னும் கிரேக்கத் தத்துவ ஞானியின் காலத்திலிருந்து, கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பித்த மார்க்ஸ் காலத்தின் முன்வரை, 'மக்களின் நல்வாழ்வுக்கான' ஆராய்ச்சிகளனைத்தும் நம்பிக்கையான முடிவை அளிக்கவில்லை. பெரும் பகுதி வெறும் சொல்லாராய்ச்சியாகவும், வேதாந்த விசாரணையாகவும், சமாதானத்தை அளிக்காத சமரச கீதமாகவும், நாட்டுக் குதவாத ஏட்டுரையாகவும் முடிந்தது.