பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ♦ அறிஞர் அண்ணா



தொழிலாளர்கள் ஸ்தாபனம் சில அடிப்படைக் கொள்கைகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது என்றால் சில குறைபாடுகளை தொழிலாளிகளின் நீக்கிக் கொள்வதற்குத்தான்.

தொழில் வளர்ந்தால்தான் பொதுச் செல்வம் ஏற்படும்; அதன் வாயிலாகத் தனிப்பட்ட மனிதன் வாழ்விலும் வளமுண்டாகும்.

தொழிலாளர் வாழ்வு பாழ் நிலமாக அல்லாமல் பசுமையோடு பூங்காற்று வீசும் தோட்டமாக இருக்க வேண்டும்.

இராணுவத் துறையிலும், அரசியல் துறையிலும் வளர்ந்துள்ள இதர நாடுகளின் வரிசையில் நாம் இல்லாதிருக்கலாம்; ஆனால், தொழில்களுக்குத் தேவையான அறிவிலோ, ஆற்றலிலோ நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.

தனது உழைப்பினை மனமுவந்து ஈந்திட பலப்பல ஆயிரவர் முன் வந்திடின், சமூகம் பெற்றிடக்கூடிய பயன் பெருமை பெறத் தக்கதாக அமையும். 'எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் செலவிட்டது போக, மிஞ்சியதில் ஒருமணி நேரமாகிலும் நாட்டின் பொது நன்மைக்காகச் செலவிடுவேன்' என்ற உறுதி கொண்ட சில ஆயிரவர் தமது உழைப்புச் செல்வத்தைத் தந்திடின், சமூக மேம்பாடு வளருவது உறுதி!

தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழிலாளர்கள் மன நிம்மதியுடன் வாழ்ந்தால் தான் தொழிலதிபர்கள் வாழமுடியும்--தொழிலிலும் லாபம் வரும்.

தொழிற்சாலையிலுள்ள ஓர் இயந்திரத்தின் சிறிய பல் சக்கரத்தையும் எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறீர்களோ அதைவிட எந்தத் தொழிலாளியும் முக்கியத்துவம் குறைந்தவரல்லர்.