பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ♦ அறிஞர் அண்ணா



அந்த ஏழைக்கு ஒரு விழா எடுக்கிறார்கள்! உழவனுக்கு என்று ஒரு திருநாள் நடத்துகிறார்கள்! உழவர் திருநாள்! பொங்கற் புதுநாள்!-என்றெல்லாம் பெயரிடுகிறார்கள்! போற்றுகிறார்கள்,நாட்டைப் பொன் கொழிக்கும், பொலிவு பூத்த இடமாக ஆக்கி அளித்ததற்காகப் பெருமைப்படுத்துகிறார்கள். அவன், புகழ் பாடுகின்றனர் கவிஞர்கள்! அவன், இயல்புகளைப் போற்றுகின்றனர் நல்லோர்! அவனை, அரசு கூட வாழ்த்திட முன் வருகிறது! அவன், விழிகளை அகலத் திறந்து பார்க்கிறான், வியப்புடன்! புறக்கணிக்கப் பட்டுக் கிடந்தவனை நோக்கி, புகழ் மாலையுடன் பலர் ஓடோடி வந்திடக்கண்டு, ஈதென்ன புதுமை? இதற்கு என்ன காரணம்? என்னவோ இதன் விளைவு? என்றெல்லாம் அவன் தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறான்.

அவன் ஏழை-ஆனால் இன்று அவனைப் புறக்கணிக்க அஞ்சுகிறார்கள்! அவன் சிந்திக்கத் தொடங்கிவிட்டானே, சிறுமைப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வு கொண்டிடின். சீற்றம் பொங்கிடுமே, அஃது தடுத்திட முடியாத அழிவையன்றோ மூட்டிடும். போகபுரியைத் தகர்த்திடுமே என்று அஞ்சத் தொடங்கிவிட்ட கனதனவான்கள், அவனை மயக்கிட, இனிப்புப் பேச்சுதந்திட முனைகின்றனர். அவன் ஏழை; வெள்ளை உள்ளம் கொண்டவன்; எனவே எளிதிலே அவனை மயக்கிவிடலாம் என்று எண்ணுகின்றனர்!

எல்லாம் உன்னால்தானே!- என்று புகழ்ந்தால், அவன் உச்சி குளிர்ந்துவிடும் என்று எண்ணுகின்றனர்!

உன்னாலன்றோ உலகு என்று உரைத்ததும் அவன் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளும்; அவன் தனக்கு இழைக்கப் பட்டு வரும் கொடுமைகளை மறந்திடுவான்; புதிய உற்சாகத்துடன் உழைத்திடுவான்; புதுப்புது செல்வத்தை ஆக்கித் தந்திடுவான் என்று எண்ணுகின்றனர். அவன் ஏழை! எத்தர்கள் அவனை ஏமாளி என்றே தீர்மானித்து விட்டுள்ளனர்!