பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அறிஞர் அண்ணா அவனுடைய பழைய நோயைப் போக்கவில்லை! போக்காதது மட்டுமல்ல- நோய் வளரலாயிற்று! தொழில் உலகப் புரட்சி நடைபெற்றது; செல்வம் திரட்டும் சீமான்கள் சிலரும்-அவர்களிடம் உழைத்து அலுக்கும் ஏழைமக்கள் ஏராளமாகவும் இருந்து வாடும் நிலை ஏற்பட்டது! உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் இங்கிலாந்துப் பொருள்கள் - சிறப்பாக பருத்தி ஆடைகள் - ஏற்றுமதி செய்யப்பட்டன; பல்வேறு நாடுகளிலே அமைக்கப் பட்டிருந்த வியாபாரக் கோட்டங்கள் மூலம் பெரும் பொருள் ஈட்டினர்-தொழிலதிபர்கள்; தொழிலாளர்களோ வறுமையில் வாடினர்! தொழில்களில் இயந்திரக் கருவி பயன்பட்டதால், உற்பத்தியின் அளவு அதிகப்பட்டது; முதலாளிக்கு இலாபம் குவிந்தது. கைத் தொழிலின்போது தேவைப்பட்ட அளவு தொழிலாளர்கள் தேவைப்படவில்லை; கூலியும் மட்டம், வேலை முறையோ-தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிவதாகவே இருந்தது! நாளெல்லாம் ஒரு தொழிலாளி- கைத் தொழில் மூலம் சில கருவிகளைப் பயன்படுத்தி 4880 ஊசிகள் செய்ய முடிந்தது; இயந்திரத் தொழில் முறையின் மூலம் - ஓர் இயந்திரத்தில் ஒரு நாளில் 1,45,000 ஊசிகள் தயாரிக்கப்பட்டன. இந்த அளவு உற்பத்திக்காகக் கைத்தொழில் முறை மூலம் உற்பத்தி செய்வதானால், 125 தொழிலாளர்களைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். 125 தொழிலாளர்களுக்கும் கூலி தந்திருக்க வேண்டும்; ஆனால் ஓர் இயந்திரத்தை- சிலரைக் கொண்டு நடத்தச் செய்து, முதலாளி இலாபமடைகிறான் - செல்வம் வாழுகிறது! பரம்பரைப் பிரபு - இந்தப் பணப் பண்ணைச் சீமானிடம் - பயப்படக் கூடச் செய்கிறான்!