பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

நட்புவளர் காதை

புலமிக்கார் மாசற்றார் கேண்மை போலப்
பூதலத்தில் யாவுளவோ? ஒன்று மில்லை
வலமிக்க வாழ்வுக்கு நட்பைப் போல
வழிசெய்யும் பொருளொன்று கண்ட தில்லை;
நலமிக்க நண்பரிலா வாழ்க்கை பாழாய்
நனிவறண்ட பாலைநிலம் போல வாகும்;
உளமிக்க நண்பருடன் பழகும் வாழ்க்கை
உயிராறாய் மலர்வனமாய்த் திகழ்ந்து தோன்றும். 1

பெரும்புலமை மிகுநெஞ்சில் தம்மோ டொத்த
பிறருக்கும் மதிப்பளித்துப் புகழ்ந்து போற்றி
விரும்புவது சற்றருமை: ஆனால் எங்கள்
பீடுநிறை மணிப்புலவர் தமிழ கத்துப்
பெரும்புலவர் எவருளரோ அவரை யெல்லாம்
பேணியவர் நட்பனைத்தும் பெற்றி ருந்தார்;
கரும்புநிகர் நூல்நயமும் நல்லார் நட்பும்
கதிரேசர் வளர்பிறைபோல் வளர வாழ்ந்தார். 2

சங்கங்கள் பலவைத்துப் பெருமை பூணத்
தமிழ்காத்த பாண்டியர்கள் சென்ற பின்னர்
இங்கெங்கள் தமிழ்காக்கப் புலவர் என்ற
இனங்காக்க இனியதொரு சங்கங் கண்டு.
துங்கமுற அதைவளர்த்து நின்ற பாண்டித்
துரைத்தேவர், இவர்புலமைத் திறத்தைக் கண்டு
பொங்கிவரும் மகிழ்வதனாற் சங்கங் காக்கும்
புலவர்க்குள் ஒருவரென ஆக்கிக் கொண்டார். 3