பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௩௬

ஊன்றுகோல்


குலம்பார்ப்பர், குவிசெல்வ வளம்பார்ப்பர்,
குடிபார்ப்பர், சீரும் பார்ப்பர்,
நலம் பார்ப்பர், கலன்பார்ப்பர், நடந்துவரும்
நடைபார்ப்பர், உடையும் பார்ப்பர்,
நிலம் பார்ப்பர், நாகரிக மனைபார்ப்பர்,
நிகழ்மனத்தில் அறிவு, பண்பு
நலம்பார்க்கும் நிலைமட்டும் மறந்திடுவர்
நகரத்தார் நிலைதான் என்னே ! 3

மகனுக்குத் திருமணநாள் வாராதோ
எனஈன்றார் வருந்தி நிற்க,
தொகை மிக்க நூல்வல்லார் அதையுணர்ந்து
‘துயர் விடுக என்பின் வந்தார்
மகிழ்வுக்கு வழிசெய்க மணஞ் செய்க
மற்றெனக்குத் தேவை யில்லை,
[1] பகலுக்கும் பயின்றிடுவேன் சபைவளரப்
பணி செய்வேன்’ எனப்ப கர்ந்தார் 4

உறுபிணியாற் கால்தளர்ந்த கதிரேசர்
உளந்தளரார், ஊன்று கோலின்
பெருவலியால் நாடெங்கும் நடந்துலவித்
தமிழ்பரப்பி, அதனைப் பேணாச்
சிறுசெயலால் தளர்ந்திருந்த தமிழ்மாந்தர்
செயலாற்ற ஊன்று கோலாய்
வருபவர்தாம் இவரென்று தெளியார்தாம்
மகட்கொடைக்கு மறுத்து வந்தார். 5


  1. நாள் முழுமைக்கும்