பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஊருக்குள் ஒரு புரட்சி

1

டியில் துடித்துக் கொண்டிருக்கும் பல்லி, பாச்சான்களை, அடிவயிற்றுக்குக் கீழே மறைத்துக் கொண்டு. அசையாமல் கிடக்கும் மலைப் பாம்புபோல, நேற்றுவரைக் காட்சியளித்த சட்டாம்பட்டி. அன்று மட்டும், மொட்டைப் பனைபோல் முடியுதிர்ந்த தலையை விக்காலும், முதுமைச் சுருக்கங்களைப் பவுடர் வகையறாக்களாலும், சாகச லீலைத் தடயங்களை, ஆடை ஆபரணங்களாலும், மறைத்துக் கொள்ளும் வயதான "இளம் பெண்ணைப் போல" விழாக் கோலத்தில் மின்னியது.

அங்கே கோவிலுக்கருகே போடப்பட்டிருந்த மேடைக்கு சற்று தொலைவில் இரண்டு கம்பங்களில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில், விவசாயி... விவசாயி என்று அந்தக் கிராமத்தைக் கூப்பிடுவது போலவும், அந்தக் கிராமமே குரலிடுவது போலவும் பாட்டு ஒலித்தது. அங்கே சிறு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்ட விழா நடக்கப்போவதே, கிராமத்தின் இந்த மேக்கப்பிற்குக் காரணம்.

அனைவரும், அமைச்சரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தார்கள். அமைச்சரிடமிருந்து கறவை மாடுகள். விவசாயக் கருவிகள், நெற்குதிர்கள் போன்றவற்றை வாங்கிக் கொள்வதற்காக, சில சிறு விவசாயிகள், விழா மேடைக்கு அருகில் போடப்பட்டிருந்த பெஞ்சில், முண்டாசுத் தலைகளாக ஜோடித்து வைக்கப்பட்டிருந்தார்கள். லயன்ஸ் கிளப் கொடுக்கும் இலவச ஆடைகளை வாங்கிக் கொள்வதற்காக பத்துப் பதினைந்து அரிஜனப் பையன்கள். அந்த பெஞ்சிற்கு முன்னால் உட்கார, அந்தப் பிள்ளைகளைப் பெற்றவர்கள். சற்று தொலைதுாரத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

இந்த அரிஜனங்கள் ஒதுங்கியிருந்த இடத்துக்கு அருகேயே, உள்ளூர் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக, அரசாங்கத்தின் உதவியோடும். பாங்குகளின் கடனோடும் அரியானாவில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் ஜெர்ஸி இனப் பசுமாடுகள், கன்றுகளுடன் கட்டப்பட்டிருந்தன.

அவற்றிற்கு அருகே, சில இளைஞர்கள் காரசாரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஓராண்டுக்கு முன்பு, அங்கே துவக்கப்பட்ட கிராம இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் அவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரி இளைஞர்கள். ஒரே ஒருவன் மட்டும் எட்டாவது வகுப்புவரை இவர்களேடு படித்து, எல்லாப்