பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 125 இன்ஸ்பெக்டர் யோசித்துக் கொண்டிருந்தபோது, கையில், ஒரு காகிதத்துடன் உள்ளே நுழைந்த சின்னான் "என்ன சார். எஸ்.பி. சொல்லி ஒன் ஹவர் ஆகுது... இன்னுமா ஆண்டிய விடல..." என்று எரிச்சலோடு கேட்டான். இதுவரை, அமைதியாக - அதுவே ஆணவமாகத் தெரியும்படி இருந்த ஆண்டி. சின்னானைப் பார்த்ததும், கண் கலங்கினான். சின்னான். அவனருகே வந்து. அவனைத் தூக்கி நிறுத்தி, மார்புடன் அனைத்தபோது, ஆண்டியப்பனால் விம்மாமல் இருக்க முடியவில்லை. "சின்னான்... இப்போதான் ஒனக்கு கண்ணு தெரிஞ்சுதா சின்னான்... நாம ஒண்ணா சாப்பிட்டு. ஒரே பாயில படுத்து... ஒரு தாய் மகன்க மாதுரி இருந்ததை மறந்துட்டியே... சின்னான்... மறந்துட்டியே... நான் என்ன தப்புப் பண்ணுனேன் சின்னான்... எல்லாப் பயலுவட்டயும் பேசுற நீ என்கிட்ட பேசாம இருந்தியே... நான் பாவிதான். ஆனால் நீ பேசக்கூடாத அளவுக்கு பாவியா சின்னான்... சொல்லு சின்னான்...." சின்னானின் கண்களும் கலங்கின. பாசம், இருவரையும் வேதனைப் பாட்டுடன் தாலாட்டிக் கொண்டிருந்த போது. புதுவிதமான ஏழையைச் சந்தித்த அதிர்ச்சியில் இருந்து மீளாத இன்ஸ்பெக்டர், சின்னானைத் தனியாகக் கூப்பிட்டு, விவகாரத்தை விளக்கினார். சின்னான், மீண்டும் ஆண்டியிடம் வந்து, அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு, காலேஜ் வாத்தியார் மாதிரி பேசினான். "போலீஸ்காரங்க நம்ம எதிரியில்ல... இன்றைய அசிங்கமான சமூக நிஜத்தின் நிழலுதான் போலீஸ்... நிஜத்த தொட்டால்தான் நிழலுல தெரியும். நிழல பிடிச்சு நிஜத்தப் பிடிக்க முடியாது... சரி புறப்படு..." ஆண்டியும், சின்னானும் வெளியே வந்தார்கள். சின்னான் அவசர அவசரமாகப் பேசினான். "ஆண்டி... நீ மொதல்ல ஊருக்குப்போ... நான் வர்ரது வரைக்கும் வாயையும் கையையும் கட்டிக்கிட்டு இருக்கணும்... கோபல மதுரையில போலீஸ் புடிச்சி வச்சிருக்காங்களாம். நான் மதுரைக்குப் போயிட்டு. அவனைக் கூட்டிக்கிட்டு வாரேன். சரி... சீக்கிரமா போ... இனிமேல் நீதான் சின்னான்.... நான்தான் ஆண்டி... மறந்துடாதே...?" சின்னான் போய்விட்டான். தனித்து விடப்பட்ட ஆண்டியப்பன், பஸ் நிலையத்திற்கு வந்தான். அங்கே, அவனிடமிருந்து எல்லா வகையிலும் தூரமாய்ப்போன நெருங்கிய உறவினர் ஒருவர், அவனிடம் ஒரு தகவலைச் சொன்னார். "ஆண்டி... ஒன் வீட்ல ஒரே அழுகைச் சத்தமா கேட்டுது. ஒன் தங்கச்சிக்கோ... பிள்ளைக்கோ. ஜன்னி வந்து உயிருக்கு ஏதோன்னு பேசிக்கிட்டாங்க... அங்கே போட்ட அழுகைச் சத்தம், பரமசிவம் வீட்டு ரேடியோ சத்தத்துல. சரியா காதுல விழல... எதுக்கும் சீக்கிரமா போடே..."