பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 1 4 3 "சொல்லுறேன்... சமூக உறவு. பொருளாதார உறவின் அடிப்படையில் அமைஞ்சது. உறவுக்கு மனிதாபிமானமோ, மனிதாபிமானத்திற்கு உறவோ தேவையில்லை. எந்த ஜாதியாய் இருந்தாலும், அந்த ஜாதியில் ஏழையாய் இருப்பவன் ஹரிஜன்தான். நீரைவிட, ரத்தம் அழுத்தமாய் இருக்கலாம். ஆனால் பணம், ரத்தத்தை விட அழுத்தமானது. பணக்காரன் பணக்காரனோடு சேரும்போது, ஏழை ஏன் ஏழையோடு சேரக்கூடாது?" - "இப்போ யாருப்பா சேரக்கூடாதுன்னு சொன்னது? சேருறதுக்கு வழியச் சொல்லாம.." "சொல்லுறேன்... நாளைக்கு எங்க சேரில... நாம எல்லாரும் அதிகாலை ஐந்து மணிக்குக் கூடுவோம். சேரில கூடணுமுன்னு அகம்பாவத்துல சொல்லல... ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பகுதியை புனிதப் படுத்துறதுக்காக... நமக்குள்ள ஜாதி இல்லன்னு நிரூபிக்கதுக்காக கூடணுமுன்னு சொல்லுதேன். இங்க இருக்கிற இருபது பேரும்... சேரியில தேறுற முப்பது பேருமாய் ஐந்து மணிக்குக் கூடுவோம். கூடி நம்ம மாடுகளைக் கைப்பற்றுவோம். நம்ம பேர்ல. இருக்கிற பினாமி நிலங்களில் ஏர் கட்டுவோம். சரிதானே..." "சரிதான். சரிதான்... மாசானத்திட்ட இருக்க நெல்லு மூட்டைய எடுக்கணும். சின்னத்துரைகிட்ட இருந்து மூவாயிரம், மூவாயிரம் ரூபாயை வாங்கி. மூக்கையா குடும்பத்துக்கும். நயினார் குடும்பத்துக்கும் கொடுக்கணும்... செறுக்கி மவன் கேஸ் போட மாட்டேன்னு சொல்லுதானாம்..." o இதற்குள், சிதை எரிந்து முடிந்தது. அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் எழுந்து, சிதைக்கருகே போனார்கள். அஸ்தியை எடுத்துக் கொண்டு, ஏரிக் கரைக்குப் போய், நீரில் கரைத்தார்கள். சின்னான். அவர்களை உஷார் படுத்தினான். "மறந்துடாதீங்க... மேளச் சத்தம் சேரியில கேட்டதும் வந்துடனும்... கர்ணத்த எப்படியாவது அங்க கொண்டு வந்துடனும். ஆனால் யாரையும் அடிக்கப்படாது. மீனாட்சி... என்னென்ன காரணங்களால் மறைந்தாளோ... அந்தக் காரணங்கள் ஒழிவதற்கான காரியங்களைச் செய்யப் போகிறோம். இது மீனாட்சி அஸ்தி சாட்சியாய் நாம் எடுக்கிற சத்தியம். மீனாட்சியோட அஸ்தி, நம் புரட்சிக்கு அஸ்திவாரம்." எல்லோரும், புதிதாய் பிறந்தவர்கள்போல், ஊருக்குத் திரும்பினார்கள். ஆண்டியப்பனிடம் இருந்த குழந்தையை, சின்னான். காத்தாயியிடம் கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு போய்விட்டான். சூன்யத்தின் ஆடு தாங்காமல். ஆண்டியப்பன் தங்கையை சாத்தி வைத்திருந்த மூலையில் சாய்ந்திருந்தான். எங்கும் இருளின் ஆதிக்கம். ஊரே தூங்கி விட்டது. வெறுமையின் வெம்மை தாங்காமல், அவன்