பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம்

15


 அதிகாரிகள் கைதட்டினார்கள். சிறிது யோசித்துவிட்டு, அமைச்சரும் கைதட்டினார். அவர், பஞ்சாயத்து பரமசிவம் தேர்தலில் நிற்கமாட்டார் என்பதற்காகவே கைதட்டினார் என்று கூட்டத்தில் ஒரு சாரார் பேசிக் கொண்டார்கள்.


குமார், பேச எழுந்தான்.

இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், காதுகளை கூர்மையாக்கி, கைகளைத் தட்டுவதற்கு தயாராகக் காத்து இருந்தார்கள். மாசானமும், தன் நீண்ட நாள் கனவு நனவாவதைக் காண, அவரைத் தங்களின் கோஷ்டியில் சேர்க்க விரும்பாத உள்ளூர் பிரமுகர்களின் ஊழல்கள் அம்பலமாவதைக் கேட்பதைவிட, அவர்களின் முகங்கள் போகிற போக்கைப் பார்ப்பதில் அதிக அக்கறை செலுத்தினார்.


பிச்சி உதறப்போறான்... டேய்... பரமசிவம்... மூணு முளக் கயிற்றை எடுத்துக்கடா...


குமார் மைக் அருகே வந்தான். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, கால்மணி நேரத்தை காலாவதியாக்கிவிட்டு, பொருளுக்கு வநதவன், அமைச்சரைப் பார்த்தான். அதிகாரிகளைப் பார்த்தான். பஞ்சாயத்துத் தலைவரைப் பார்த்தான். அத்தனையும் அன்பு முகங்கள். அவன் தேர்தலில் நிற்கவேண்டும் என்று தட்டிய கரங்கள். அவன், நன்றி இலலாமல் பேசலாமா... கூடாது. இளைஞர் மன்ற நிர்வாகிகள் என்ன சொல்வார்கள். கிடக்கிறான்கள். சான்ஸ் கிடைத்தால்... இந்தப் பயலுவளும் இப்படித்தான் பேசுவாங்க.


"அருமை அண்ணன் பரமசிவம் அவர்களின் (பரமசிவம், அவனுக்கு மாமா முறை. மேடை நாகரிகத்தைக் கருதி, அப்படிப் பேசினான்.) சேவை, இந்த கிராமத்திற்குத் தேவை. அவர்தான் பஞ்சாயத்துத் தலைவராக வரவேண்டும். (உடனே பரமசிவம் மட்டும் கைதட்டி விட்டு, மற்றவர்கள் தட்டாமல் போனதால், சங்கடப்பட்டு நெளிந்தார்.) எனினும், அவர், யூனியன் தலைவருக்கு நிற்கும் தகுதியை எட்டியவர். அவர் அப்படி நின்றால், நான் இப்படி நிற்கத் தயார். எங்கள் கிராமத்தில் பிரச்சினைகள் சில உள்ளன. சிலவே. பிரச்சினைகள் இல்லாத ஊரேது? அவை இருந்தன - இருக்கின்றன - இருக்கும். எனினும் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் ஆசியோடும், அருமை அண்ணன் பரமசிவத்தின்... சேவைக்காய் பிறந்த இந்த பரமசிவத்தின் ஒப்பில்லாத தலைமையின் கீழ் நேர்மையின் நெடிதுயர்ந்த உருவமாம் எங்கள் கர்ணத்தின் ஒய்வில்லா உழைப்போடும், மாதர்குல மாணிக்கமாம் மகளிர் மன்றத் தலைவி சரோஜா அம்மையாரின் தாய்மையான பேரன்புடனும், பிரச்சினைகள் தீர்க்கப்படும். இந்த நல்லோர்க்கு, எல்லா வகையிலான ஒத்துழைப்பும் நல்கப்படும் என்பதை, இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவன் என்ற முறையில் தெரியப்படுத்திக் கொள்கிறேன்."