பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஊருக்குள் ஒரு புரட்சி



நற்பணி மன்றத்தின் மிச்சமீதி நிர்வாகிகள் வாயடைத்துப் போனார் கள். கைகள் இழுத்துக் கொண்டன. நெஞ்சங்கள் கொதித்துக் கொண்டன. மன்றத்தின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்கிறான். மன்றம் ஒப்பன் வீட்டுச் சொத்தால?. பஞ்சாயத்துத் தலைவர போய் பாராட்டுற? அவரு கால வேணுமின்னாலும் கழுவிக் குடி மன்றத்த. எதுக்குல இழுத்த... நீ... அவரு மகள பார்த்த பார்வையிலயே சந்தேகப்பட்டோம். அப்படியும் உன்னைப் பேசச் சொன்ன எங்க வாயில மைக் கம்பிய வச்சே இடிக்கணும்... துரோகிப் பய. வாவா ஒன் கையக் கால ஒடிக்காட்டால் பாரு.


விழா முடிந்தது. அமைச்சர் ஏழை பாளைகளுக்கு விவசாயக் கருவிகளைக் கொடுத்தார். கறவை மாடுகளைக் கொடுத்தார். ஹரிஜனங்களாக ஜோடிக்கப்பட்ட ஜாதிப் பையன்களுக்கு இலவச ஆடைகளையும் கொடுத்தார். அவர், பாவம் நம்பித்தான் கொடுத்தார்.


கூட்டம் கலைவதற்கு முன்பே, இளைஞர் மன்றத்தின் தலைவ ரில்லாத நிர்வாகிகள், ஊர்ப்பாலம் அருகே போனார்கள். அந்த வழியில் வரப்போகும் குமார் பயலை, உதை உதையென்று உதைத்து, ஒரு பல்லையாவது உடைக்கவேண்டும்!


கலைந்த கூட்டத்தில், இரண்டு பெண்களுக்கிடையே, தலைமுடி பிடிக்கிற அளவுக்குச் சண்டை.


மாணிக்கம் பி.ஏ.பி.டி. மீது மையல் கொண்டிருந்த, மகளிர் மன்றத் தலைவியின் மகள் மல்லிகா, அவனிடம், அன்று எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தபோது, ஆண்டியப்பன், அவனைத் தனியாகக் கூட்டிக் கொண்டுபோய் அவனுக்கு இணையாகப் பேசியதில் அவளுக்கு ஆத்திரம். இன்னொரு பெண்ணிடம் வாயை விற்றுவிட்டாள்.


"இந்த ஆண்டிய பாருங்க... இவனும். இவன் வேட்டியும் சட்டயும்... படிச்சவங்களோட நின்னால்... படிச்சவனா ஆயிட முடியுமா... பழகுறதுலயும் ஒரு தரம் வேண்டாம். பெரிய இவன் மாதிரி மாணிக்கத்துக் கிட்ட பேசுறான் பாரு... இந்த லட்சணத்துல மாட்டை வேற கையில பிடிச்சிக்கிட்டு இருக்காரு துரை... நாளைக்கு இதை எங்க மாமா வீட்ல கட்டப் போறது தெரியாமல். ஆமா... சங்கரி. நம்ம ஆண்டி. பி.ஏ. படிச்சிருக்காரா... எம்.ஏ. படிச்சிருக்காரா. உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி... பருந்து ஆயிடுமா? சீச்சீ...!"

பின்னால் வந்து கொண்டிருந்த ஆண்டியப்பனின் தாய் மாமா மகள், மல்லிகாவின் முன்னால் வந்து நின்று கர்ஜித்தாள்:

"ஆமாடி... எங்க அத்த மகன் குருவிதாண்டி... உங்கள் மாதுரி கோழிக்குஞ்சை பிடிக்கிற பருந்துல்லடி. அவரு வேட்டி கட்டுனால் கன்ன... கட்டாம நின்னா என்னடி... ஒனக்கு அதனால என்னடி நஷ்டம்?"