பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் i 9 யில் அதை நீரிட்டுக் கலக்கி, மாட்டின் முன்னால் வைத்தான். அந்த சீமைப்பசு சாப்பிடுவதைப் பார்த்து தான், தனக்குப் பிடித்தமான கோழிக் கறியை சாப்பிட்டு விட்ட திருப்தியில், தன்னையறியாமலேயே, வாயைத் துடைத்தபோது, தங்கம்மா அங்கே வந்து நின்றாள். அவளை, ஆண்டியப்பன் கவனிக்கவில்லை என்பதை அவள் கவனிக்கவில்லை. அத்தை மகன், தன்னை அலட்சியப்படுத்துகிறான் என்பதுபோல், சிறிது கோபப்பட்டது போல், தன் வீடடுக்குத் திரும்பப் போகப்போவது போல், லேசாகத் திரும்பினாள். அப்படியும், அவன், பார்க்காததால், இப்போது அவள் செருமினாள். தலை நிமிர்ந்த ஆண்டியப்பனைப் பார்த்து "மாடு வந்துட்டு. இனும ஒமக்கு கண்ணு தெரியுமா?" என்றாள். தன் கண்களை மாட்டின் மீதும், மச்சான்மீதும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே. சுத்தி செய்யப்படாத வைரம்போல், நாட்டுக்கட்டை மேனியில், பருவம் 'சன்மைக்கா போல் பளபளக்க, நூல் புடவையிலும் நூதனமாக விளங்கிய மாமன் மகளிடம், ஆண்டியப்பன் சிரித்துக்கொண்டே பேசினானா அல்லது பேசிக் கொண்டே சிரித்தானா என்பது, விவாதத்திற்குரியது. பேசினான். சிரித்தான். சிரித்தான் பேசினான். "என்ன சொன்ன?" "மாடு வந்துட்டு... இனும... மவராசனுக்கு கண்ணு தெரியுமா?" "நீ வந்தத...சொல்லுதியா?" "என்னைப் பார்த்தா ஒமக்கு மாடு மாதிரி தெரியுதா?" "ஆமாம். நீ எனக்கு என்னைக்குமே காராம்மணிப்பசு... காமதேனுப் பெரும் பசு... இந்த மாட்டுக்கு இந்தப் புண்ணாக்கு எப்படியோ... அப்படி நீ எனக்கு." "சரியான புண்ணாக்கு மாடன்... இநத மாட்ட வரக்க முடிஞ்சது... எங்கம்மாவ மட்டும் முடியல..." "முடியுற காரியமா! புலிய வசக்குற சர்க்கஸ் காரனால கூட ஒம்மாவ வசக்க முடியாதே... பாவம்... எங்க மாமனே ஒம்மாகிட்ட குட்டுப்பட்டு குட்டுப்பட்டு கூனாப் போயிட்டாரே... ஒம்மா... சரியான..." "இதுக்குமேல... எங்கம்மாவ பேசுனா... எனக்கு கெட்ட கோபம் வரும்..." "ஒனக்குக் கோபம் வந்தால், எனக்கு யோகம் வந்தது மாதுரி. தலையில குட்டுவ... கையில கிள்ளுவ... எப்படியோ... ஒன் கை என்மேல பட்டா சரிதான்..." "நான் எதுக்காவ சொல்லுதேன் என்கிறத. நீரு விளையாட்டா எடுத்துக்கிட்டா அப்புறம் நாம பழகுனதும் விளையாட்டா போயிடும்."