பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 25 காத்தாயி, அவனை அதட்டினாள். "ஒமக்கு கொஞ்சங்கூட... பொறுப்பில்ல முதலாளி... ஒம்மாலதான் மீனாட்சியும், அது குழந்தையும் அவஸ்தப்படுது. பறச்சிகிட்ட பால் குடிச்ச பிள்ளன்னு ஊருல கிண்டல் பண்ணுவாங்க..." "செறுக்கி மவனுவள... கையக் கால ஒடிக்கேன். ஆமா, நீ பால் கொடுக்கதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்...?" "பின்ன என்னய்யா...? நீரு காலா காலத்துல ஒரு கல்யாணம் பண்ணியிருந்தா ஒம்ம பெண்டாட்டி இந்நேரம் ஒரு பிள்ளய பெத்திருப்பாவ... மீனாட்சியம்மா மவனுக்கும் பால் கெடச்சிருக்கும்..." "நான். கல்யாணம் செஞ்சி. வீட்டுக்காரி. இவள்கிட்ட சண்டை போட்டிருந்தா... நீயே என்னை பிடிபிடின்னு பிடிச்சி. திட்டியிருப்ப..." "எங்கயாவது... மாமா மகள்... அத்த மகன் கிட்ட சண்ட போடுமா... நம்ம தங்கம்மா... தங்கக் கம்பியா..." "நான் தங்கம்மாவதான் கட்டியிருப்பேன்னு சொல்லுதியா..." "நீரு விட்டாலும், அது விடாது... என்கிட்ட. ஒம்மப் பத்தி... எவ்வளவு ஆசயோட சொல்லியிருக்கு தெரியுமா..." "சரி... நீ சொல்றபடியே... காலா காலத்துல இவளக் கல்யாணம் செஞ்சிட்டாலும். இவள். இதுக்குள்ள பிள்ள பெத்திருப்பாள் என்கிறது என்ன நிச்சயம்? முதல் பிள்ளிக்கு அவசரப்படக் கூடாதுன்னு என்கிட்டயே... எத்தன் த்டவ சொல்லியிருக்கா தெரியுமா...?" தங்கம்மாவின் முகம் சிவந்தது. அப்போதே கல்யாணம் நடந்து, அப்போதே குழந்தை பிறந்துவிட்டது போல், தரையையே பார்த்தாள். பிறகு சிலிர்த்தெழுந்து "ஏன் பொய் சொல்றிரு. ஒம்ம மூஞ்சி..." என்று சொல்லிவிட்டு, வெளியே ஓடப்போனாள். அதற்குள் வாசல் பக்கம், அடைக்கலசாமி நின்றதால், அய்யாவின் முகத்தில் விழிக்கப் பயந்து, உள்ளேயே ஒடுங்கிக் கொண்டாள். அடைக்கலசாமி, உள்ளே வந்தார். ஆண்டியப்பன் சற்று ஒதுங்கி உட்கார்ந்து கொண்டு "உட்காரும் மாமா..." என்றான். தான் பேசியது, மாமாவுக்குக் கேட்டிருக்குமோ என்று சங்கோஜம். அதே சமயம். நாளைத் தள்ளிப் போட்டுக் கொண்டுவரும் மாமனுக்கு உறைக்கட்டும் என்ற குறும்புத்தனம். அடைக்கலசாமி, தான் எடுத்து வளர்த்த தங்கை மகள் மீனாட்சியை ஆதரவாகப் பார்த்துக் கொண்டே"இப்ப எப்படியம்மா இருக்கு... ஆண்டி... அந்த மருந்துச் சீட்ட எடுடா... என் கிட்ட கொஞ்சம் பணமிருக்கு... கோணச்சத்திரத்துல வாங்கிட்டு வாரேன்..." என்றார். "ஒம்ம செலவுக்கு...?" "இருக்கிற செலவப் பாத்தால... கையில இருக்கிற காசு பத்தாது. அதெல்லாம் பாக்க முடியுமா... என் தங்கச்சி மவள் எழுந்து உட்கார்ந்தா...