பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27 3 அடைக்கலசாமிக்கு, அறுபது வயதிருக்கும். வைரம் பாய்ந்த உடம்பு. எலும்பும், சதையும் ஒன்றோடொன்று ஒட்டி, இறுகப்பற்றிய எஃகு. அதோடு மனிதர் ரோஷக்காரர். பண்ணையார்கள் ச்ார்பில், பக்கத்து ஊர்களில் போய்க்கூட, எதிரிகளை அடித்துவிட்டு வரும் புறநானூற்று வீரர். அந்தப் பசுமாடு, அவரை முட்டுவதற்காக கொம்புகளை தரையில் சாய்த்தபோது அவர் அதை பயங்கரமாகப் பார்க்க, மாடு பசுவாகி விட்டது. ஆண்டியப்பனை, தங்கை மகனாய் பார்க்காமல், பண்ணை யாருக்குத் துரோகம் செய்த படு பாதகனாகவும், கள்ளத் தேங்காய் பறித்து, அப்படிப் பறிக்கும் போதே கீழே விழுந்து செத்துப் போன மைத்துனனின் மகனாகவும் கருதினார். ஆண்டியப்பனுக்கும், அவர் தாய்மாமனாகத் தெரியவில்லை. பரமசிவத்தின் காவல் நாயாகவே அவர் தோன்றினார். பண்ணை வயல்களில், அவர் அம்மா களை பிடுங்கும்போது ஒரு வாய்க்கால் அருகே பிற்ந்த அவர். இன்னும் அந்த வாய்க்காலைத் தாண்டாத, கொத்தடிமையாகவே, அவனுக்குக் காட்சி அளித்தார். அடைக்கலசாமி, மாட்டின் கயிற்றுச் சுருக்கைப் பிரித்துக் கொண் டிருந்தார். ஆண்டியப்பன். அரிவாளுடன் அவரை நோக்கி ஆவேசமாகப் போய்க் கொண்டிருந்தான். தங்கம்மா, அவனைப் பிடித்துக்கொள்ளப் பார்த்தாள். அவன். அவளிடம் இருந்து திமிறிக் கொண்டே ஓடினான். வெளியே வந்த காத்தாயி, என்ன செய்வதென்று புரியாமல், கைகளை நெரித்தாள். இதற்குள் அங்கே வந்த, இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளான மாணிக்கம், கோபால் முதலிய இளைஞர்களும், மன்றத்தின் அட்வைசர்' மாசானமும் அருகே இருந்த பனை மரத்தருகே நின்று கொண்டார்கள். ஜாக்கிரதையான தூரம். மேற்கொண்டு நகரவில்லை. இதுவரை பனையோலைகளை வெட்டிக் கொண்டிருந்த அரிவாளுடன், ஆண்டியப்பன் பரமசிவமாகத் தெரிந்த அடைக்கல சாமியை நெருங்கி விட்டான், கையைக்கூட ஓங்கி விட்டான். காத்தாயி கதறினாள். தங்கம்மா, அய்யாவுக்குக் கேடயமாக நின்று கொண்டாள். அந்தக் கிழவரோ, எதையும் பொருட்படுத்தாமல், மாட்டின் கயிற்றை, முக்கால்வாசி அவிழ்த்து விட்டார். ஆண்டியப்பன் எதிரியின் மகள் தங்கம்மாவைத் தள்ளிவிட்டு விட்டு, கிழவரை வெட்டப் போவதற்காக தன்னை தயார் படுத்தியபோது - பசுமாட்டின் அப்பாவித்தனமான பார்வை, அவன் அரிவாள் பாய்ச்சலை அதிகமாக்கியபோது உள்ளே இருந்து வெளியே வரமுடியாமலும், உபயோகமில்லாமல் போய்விட்டோமே என்பது மாதிரியும், புரள முடியாமல், எல்லாம் பொய்மையாய் போனதுபோல் தவித்த மீனாட்சியின் ஒபபாரிச் சத்தம், வெளியே கேட்டது. ஆண்டியப்பனுக்கு அதிகமாகக் கேட்டது.