பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ஊருக்குள் ஒரு புரட்சி இதற்குள், அடைக்கலசாமியின் கையைப் பிடித்த சீனியம்மா ஓடிவந்தாள். ஐம்பது வயதுக்காரி. அதிர்வெடி பேச்சுக்காரி. "என் புருஷனயால வெட்டப்போன... வளத்த கிடா மார்புல பாயுமுன்னு சொல்லுதது சரியாப் போச்சே... நீ நாசமாப் போவ... ஊரான் வீட்டுச் சொத்துக்கு ஆசப்பட்ட ஒன் நெஞ்சில... புத்து வர... ஒன் வீட்ல எள்ளு வைக்க... இழவு விழ..." சீனியம்மா, பேச்சோடு மட்டும் நிற்கவில்லை. நிற்கவும் மாட்டாள். கீழே குனிந்து, மண்ணை வாரி, மருமகன்மீது போடப் போனபோது. தங்கம்மா தாயின் கைகளைப் பிடித்துக் கொள்ள, கையிலிருந்த மண், அதை அள்ளியவள் தலையிலேயே விழ, சீனியம்மா. வாயை மகள் பக்கமாகத் திருப்பினாள். "சண்டாளி... வேணுமுன்னா... இப்பவே... இந்தப் பய வீட்ல போயி இருந்துக்களா...! பெத்த அப்பன வெட்டப் போயிருக்கான்... இந்நேரம், என் மவராசன் மாண்டு மடிஞ்சி... மண்ணா போயிருப்பாரு... இவ்வளத்தையும் பாத்துக்கிட்டு நீ இப்படி நிக்கதவிட, அவன் வீட்லபோயி இருந்துக்கிடலாம். இவா காத்தாயிய, வச்சிக்கிட்டது மாதுரி. உன்னயும் வச்சிக்கிடுவான்..." என்றாள். ஆண்டியப்பனுக்கு. மாட்டைப் பறிகொடுத்த ஆத்திரம் சீனியம்மா மீது திரும்பிக் கொண்டிருந்தது. தங்கம்மா, அவன் ஏடா கோடமாக எதையாவது சொல்லி, எதையாவது செய்துவிடக் கூடாது என்பது போல். அவனை கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தாள். காத்தாயிக்கு கோபம் வந்தது. ஏதோ சொல்லப்போனாள். அதே சமயம், எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்து போன அவளால், ஒன்றும் பேச முடியவில்லை. பிறகு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு இந்த முண்டய... பதிலுக்குக் கேட்டால்... விவகாரம் ஜாதிச் சண்டையா மாறினாலும் மாறலாம்... பண்ணையாருங்களுக்கு கொண்டாட்ட மாயிடும்...! என்று தனக்குள்ளே பேசிவிட்டு. சீனியம்மாவை நிமிர்ந்து, நேராகப் பார்த்தாள். அந்தப் பார்வையின் சூடு தாங்காத சீனியம்மா சற்று நடந்து, ஒரு மரத்தின் பக்கமாக நின்றுகொண்டு. மகளை ஆவேசமாகப் பார்த்தாள். பிறகு "நீ வாரீயா இல்லியாளா?... இல்ல அவன் கூடயே இருக்கப் போறியாளா..." என்றாள். தங்கம்மா, அவளைப் பொருட்படுத்தாதது போல், புடவைத் தூசியைத் தட்டி விட்டுக்கொண்டே அங்கே நின்றாள். சீனியம்மாளுக்கு, இஞ்சி' தின்னது மாதிரி இருந்தது. "ஒய்யா... வடக்குப் பக்கமா போறாரு... அக்காமவன் கொடுத்த அரிவா மரியாதையில சந்தோஷப் பட்டு. ஒண்னு கிடக்க ஒண்ணு பண்ணிடப் போறாரு... வாளா... போயிப் பார்ப்போம்..."