பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 77 இதற்குள் சத்தங்கேட்டு, ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரும் ஒடி வந்தார்கள். மானேஜர் பள்ளிக்கூடத்தை குடும்பப் பாசத்தோடு: நடத்துபவர். ஆகையால் அவரது நெருங்கிய உறவினர்களான பல ஆசிரியர்கள், இடும்பன்சாமியின் இடுப்பில், கால்களை வைத்தார்கள். இது, உறவினரல்லாத ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை. பலர் குரலிட்டனர். "அவங்க சண்டய விலக்கித் தீர்க்காம... இடும்பன எதுக்குய்யா அடிக்கிய..." "ஏய்... அருணாசலம்... இடும்பன விடுறியா... ஒன் இடுப்ப ஒடிக்கட்டுமா..." "அவன் எப்டிய்யா எங்க மச்சான அடிக்கலாம்?" "ஒங்க மச்சான் எப்டிய்யா அவர சஸ்பெண்ட் பண்ணலாம்? வாத்தியார்னா கிள்ளிக்கீரயோ... எப்டிய்யா சஸ்பெண்ட் பண்ணலாம்..." இடும்பன்சாமி, இடுப்பைத் தடவிவிட்டுக்கொண்டே, தன்பக்கம் பேசிய ஆசிரியர் குழாத்தின் மத்தியில் நின்று கொண்டார். ஒரு ஆசிரியர் "இப்பவே... நம்ம மாநில செகரட்டரிக்கு தந்தி அடிக்கணும். இவரு வகுப்புக்குப் போகாம... நாம போகப் போறதில்ல... பார்த்திடலாம்..." கண்ணாடி ஆசிரியை, கீழே இருந்து இன்னும் எழுந்திருக்காத ஜம்புலிங்கத்தைப் பார்த்தார். "வரவர சின்னவங்க... பெரியவங்க... என்கிற மரியாத இல்லாமப் போயிட்டு" என்றார் பொதுப்படையாக. கழுத்தில் கிடந்த சிலுவைக் குறியைத் தொட்டு, இயேசுநாதருக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார். இதற்குள் ஊர்க்காரர்கள் அங்கே கூடிவிட்டார்கள். இடும்பன் சாமியும் சொந்த பந்தம் உள்ளவர். ஆள்பலம் ஒரளவு உள்ளவர். ஆகையால் ஊர்க்காரர்கள். இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்தார்கள். பெரிய கோஷ்டி, ஜம்புவிற்கு ஜே போட்டது. சின்னது இடும்பனுக்கு. "சஸ்பெண்ட் வாபஸ் வாங்காட்டா... பள்ளிக்கூடம் நடக்காது..." "பள்ளிக்கூடம் நடக்காட்டால் ஊர் இருக்காது..." இதற்குள், கூட்டுறவுத் தலைவர் ஓடிவந்தார். ஜம்புலிங்கத்தின் கை கால் இரண்டையும் பிடித்துக் கொண்டே, "அப்பா புண்ணியவான்... பங்காளி வீட்ல தீப்பிடிக்கும்போது... காலக் கட்டி அழுத கதையா பண்ணிட்டியே... ரகசியமா தீர்க்க வேண்டிய விவகாரத்த. சஸ்பெண்ட் பண்ணி பெரிசாக்கி... என்னையும் நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துட்ட... இப்பு ஒனக்குத் திருப்திதானே..." என்றார். ஜம்புலிங்கம், வெளுத்துப் போனார். பெரியய்யா மகனா இவன்? இவனுக்காக... நான் சஸ்பெண்டும் செய்து... உதையும் தின்னுருக் கேன்... நன்றியில்லாமப் பேசுறான் பாரு...