பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிரமப்பட நேர்ந்தது.... ஐந்து காசு, ஐந்து காசாக.... நல்லவேளை- ஒரு மாமா வந்தார். 'திருவிழாத்துட்டு' என்று இருபத்தைந்து காசு கொடுத்தார். அவள் 'பேராசை' ஒன்றைத் தணிக்கும் முயற்சியில் முழுமனசையும் ஈடுபடுத்தியதால், எத்தனையோ சில்லரை ஆசைகளைக் கொல்ல வேண்டியிருந்தது. நாவுக்கு ஆசை காட்டும் திண்பண்டங்களைத் தியாகம் செய்தாள். கண்ணை வசீகரிக்கும் பலூன், சிறு பொம்மை முதலியவைகளை வேண்டாமென்று ஒதுக்கினாள். குடைராட்டினம் சுற்றுவது- அது எப்பேர்ப்பட்ட விஷயம்!. அதில் ஏறலாம் என்று மனம் என்னமாய்க் குதித்தது! காசு செலவழிந்து விடுமே என்ற பயமல்லவா அவளைப் பின்னுக்கு இழுத்தது.

உலகத்தை ஆராய வேணும் என்ற எண்ணம் மனித உள்ளத்தில் ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்று புரியவில்லை. அந்தத்துடிப்பு பெற்று விட்டவர்கள் எந்தவிதக் கஷ்டங்களையும் சகித்துக் கொள்ளத் தயாராகிவிடுகிறார்கள். அனுபவம் பெற வேண்டும் என்ற தவிப்பு அவர்களை முன்னே முன்னே இழுக்கிறது.

வள்ளி அம்மைக்கும் ஏற்பட்டது. அதன் பலன் தான் அவள் பஸ்ஸில் தனியாக- தனது துணிச்சலே துணையாக- ஏறி உட்கார்ந்திருந்தாள். அதற்காக அவள் வருத்தப்படவில்லை.

பஸ் வெட்டவெளி நடுவே பாய்ந்து ஓடியது. சிற்றூர்களைத் தாண்டிச் சென்றது. வண்டிகளையும், பாதசாரிகளையும் விழுங்குவது போல் பாய்ந்து, ஒதுங்கி, பின் நிறுத்திவிட்டு வேகமாய் முன்னேறியது. மரங்கள் ஓடி வந்தன, ஒன்றும் செய்ய முடியாமல்

21