பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8


"உன்னுடன் அவளும் வரட்டுமே” என்று சத்தியவானின் தாயாரும் திடீரென்று சொன்னாள்.

"ஒகோ. இன்று காலை மருமகளின் தொல்லையில்லாமல் இங்கு இருக்கலாம் என்று பார்க்கிறீர்கள். அப்படித்தானே அம்மா?" என்று கண் சிமிட்டிக் கேட்டான் சத்தியவான்.

"இல்லை. நீ உன் பெண்டாட்டியை மகிழ்விப்பதற்காகத்தான் உன்னுடன் அனுப்புகிறேன். பாவம், அவளுக்கு இங்கே மகிழ்ச்சியூட்டுவதாக என்ன இருக்கிறது?" என்று பதில் சொன்னாள் மாமியார்.

"மகிழ்ச்சியா, அதுவும் காட்டிலா? இவளுக்கு நான் வைரமுத்து மாலை வாங்கி ஒரு நாள் போடப் போகிறேன். அப்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், காட்டுக்கு ஒரு நடை போய் வருவது அவ்வளவு மகிழ்ச்சியாக இராதே."

"என்ன, வைரமுத்து மாலையா!" என்று சாவித்திரி கேட்டு விட்டுக் கலகலவென்று சிரித்தாள். ஆனால், அவள் உள்ளத்திலே துக்கம் பொங்கிக் கொண்டிருந்தது. "இன்று காட்டிற்கு அழைத்துப் போங்கள், போதும். ஆனால் நினைவிருக்கட்டும். வைரமுத்துமாலை வாங்கித் தருவதாக இப்போது வாக்களித்து விட்டீர்கள். ஒரு நாள் கேட்டு வாங்கிக் கொள்வேன்.”

சத்தியவானும் சாவித்திரியும் சிறு குழந்தைகளைப் போலச் சிரித்துக் கொண்டும் இதைத் தருவேன் அதைத் தருவேன் என்று ஒருவருக்கொருவர் வாக்களித்துக் கொண்டும் காட்டுக்குப் புறப்பட்டனர். "போய் வருகிறேன்" என்று சத்தியவான் சொல்லிக் கொண்டதும், அவன் தந்தையும் தாயும் வழக்கத்துக்கு மீறி நெடுநேரம் அவனையே பார்த்தனர். இதைக் கவனித்த சாவித்திரி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் கண்களில் ததும்பிக் கொண்டிருந்த கண்ணீரை மற்றவர்கள் பார்த்து விடாமல் மறைத்துக் கொண்டாள். “கடவுளே, இன்று எனக்கு எதையும் தாங்கும் இதயம் தருவாய். நல்லவர்கள், பெரியோர்கள், நாரத முனிவர் ஆகியோரின் பிரார்த்தனையும் நல்வாழ்த்தும் துணை நிற்க வேண்டும்" என மனத்திற்குள் வேண்டிக் கொண்டாள்.

நடுக்காட்டிற்குள் சென்றனர். சத்தியவான் கவனமாகப் பார்த்து நல்லதொரு மரத்தைத் தேர்ந்தெடுத்தான். அதன் அடிப் பாகத்தைக் கோடரியால் பிளக்கத் தொடங்கினான். சாவித்திரி அருகிலே இருந்தாள். சத்தியவானுக்கு இன்று