பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


“சாவு என்பது தண்டனை அல்ல.”

யமனைத் தொடர்ந்து சாவித்திரியும் விரைந்து நடந்தாள். "தண்டனையில்லையா? சரி, அப்படியானால், யார், எப்போது இறக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யார்? பிறந்தவுடனேயே இறப்பதைப் பற்றி முடிவு எடுப்பது நியாயமாகுமா? அறிவுக்குப் பொருத்தமாகவும் அது இல்லையே?” என்றாள்.

“இதையெல்லாம் புரிந்து கொள்வது சிரமம். நீ ஏன் என்னைத் தொடர்கிறாய்? திரும்பிப் போ” என்றான் யமன்.

“நான் உங்களையா தொடர்கிறேன்? என் கணவரையல்லவா தொடர்ந்து வருகிறேன்” என்றாள் சாவித்திரி.

“இவன் இனிமேல் உன் கணவன் இல்லை.”

சாவித்திரி சாந்தமாகக் கூறினாள், “அப்படியல்ல. அன்பு என்பது வாழ்க்கை முடிந்த பின்னும் கூட நீடிக்கும் என்று நான் நம்புகிறேன். நான் முதன் முதல் சத்தியவானைப் பார்த்தபோதே அவர் மீது அன்பு கொண்டேன். முன்னரே தெரிந்தவர்களைப் பார்ப்பது போல நாங்கள் பார்த்துக் கொண்டோம். இந்தப் பிறவியில் நாங்கள் முன்னர் சந்தித்தது இல்லை. ஆகவே எங்களுடைய முற்பிறவியிலே நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்திருக்க வேண்டும். இப்படிப் பிறவி பிறவியாகத் தொடர்பு கொண்டவரை இப்போது நான் விட்டுச் செல்வதா? மாட்டேன். அவரை அழைத்துச் செல்வதானால், என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.”

மரண தேவதையான யமன் சிரித்தான். “மிகவும் பிடிவாதக்காரியாக இருக்கிறாயே! உன் பேச்சு எனக்குப் பிடித்திருக்கிறது. உனக்கு ஏதாவது வேண்டுமா, கேள். தருகிறேன். சத்தியவான் உயிரை மட்டும் கேட்டுவிடாதே! ஆமாம்.”

சாவித்திரி சற்று யோசித்தாள்.

“ஐயா, எனது மாமனார் அநியாயமாய் அரச பதவியை இழந்திருக்கிறார். அவருக்கு மீண்டும் அரச பதவி கிடைக்க வேண்டாமா? நீங்களே சொல்லுங்கள்.”

“அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டு யமன் மிடுக்குடன் நடந்தான். சிறிது நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி அவன் பின்னாலேயே வந்து கொண்டிருந்தாள். கல்லிலும் முள்ளிலும் நடந்ததால் அவள் காலில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்த யமனிடம்,