பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கோபமாக வந்தது. அவனால் கோபத்தைத் தாங்க முடிய வில்லை. அது ஒரு சாபமாக வெடித்தது.

“அவன் அரசனாக இருக்கட்டும். வணக்கத்துக்குரிய என் தந்தையின் கழுத்தில் செத்த பாம்பைப் போட அவனுக்கு என்ன துணிச்சல்! இதனால் என் தந்தையை மட்டும் அவன் அவமதிக்கவில்லை. காட்டில் தவம் புரியும் முனிவர்கள் அனைவரையுமே அவமதித்துவிட்டான். அவனுக்கு முனிவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவனை நான் இப்போது சபித்து விடுகிறேன். தன் இழி செயலால் அஸ்தினாபுரத்து அரசவம்சத்துக்குப் பழி தேடிக்கொண்ட இந்த அரசன் இன்றிலிருந்து ஏழு நாட்களில் மரணமடையட்டும். அதுவும் தட்சகன் என்ற பாம்பு மன்னனால் நாகலோகம் செல்லட்டும்!”

சிருங்கி இவ்வாறு கடுமையாகச் சபிக்கவும், தியானத்தில் ஆழ்ந்திருந்த அவன் தந்தை திடீரென்று கண்விழித்தார். பதறிப்போய் தன் மைந்தனைப் பார்த்தார். விபரீதம் நேர்ந்து விட்டதே என்ற கவலையில் தம் மெளனவிரதத்தையும் மீறிப் பேசினார்: "குழந்தாய், சிருங்கி, என்னடா செய்துவிட்டாய்! பரீட்சித்து அரசனை சபித்துவிட்டாயே. அவன் எவ்வளவு நல்லவன், நம்மையெல்லாம் பாதுகாப்பவனல்லவோ அவன்? இந்தக் காட்டில் நாம் அமைதியாக வாழ வகைசெய்தவனல்லவா அவன்? அவனைச் சபிக்கலாமா? உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? தவ சீலர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்களா? உன் கோபத்தாலும் சாபத்தாலும் என்னென்ன விபரீதங்கள் நேருமோ தெரியவில்லையே! பரீட்சித்தைச் சபித்தாய். அதனால் அவனுக்கு மட்டுமா அழிவு நேரும்? இந்த நாடே நிலைகுலைந்து போகுமே! சூழ்நிலை எதுவாயிருந்தாலும் இது தவறுதான். அதுவும் அத்தினாபுர அரசன் பரீட்சித்துக்கு இப்படி ஒரு சாபமா? இது மிகப் பெரிய தவறல்லவா?’ என்றார்.

சிருங்கி தலைகுனிந்தான்.

"ஐயோ. இந்தச் சாபத்தை நீ மாற்றவும் முடியாதே. உனக்கு உள்ள சக்தியின்படி, நீ சொல்வது எல்லாம் பலித்து விடுமே! அதனால்தான் நீ பொறுமையாக இருக்கவேண்டும், உன் வாயைத் திறக்கு முன்பு நூறு முறை யோசிக்கவேண்டும் என்று நான் அடிக்கடி எச்சரித்து வருகிறேன்" என்று, வருத்தப்பட்டார் அவன் தந்தை.