பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29.

விதிப்படி எல்லாம் நடக்கவே நான் வந்திருக்கிறேன். - யமனே என்னை அனுப்பியிருக்கிறான். யமனது கணக்குப்படி அரசன் இப்போது இறக்கவேண்டும். சமிகரின் மகன் சிருங்கியின் சாபம் என்பது, வரப்போகும் முடிவை முன்னதாகவே தெரிவிக்கிறது. அவ்வளவுதான்.”

காசியபர் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார். 'பரீட்சித்து இன்னும் ஏழு நாளில் இறந்தாகவேண்டுமா? அப்படியானால் சிருங்கி சபிக்காமல் இருந்தால்கூட அவனுக்கு மரணம் நிச்சயம்தானா?”

"சந்தேகமில்லாமல்"

"அப்படியானால் எனக்கு ஏன் வம்பு?" என்று சொல்லி காசியபர் தமது ஆசிரமத்துக்குத் திரும்பிவிட்டார்.

தட்சகன் நெடுநேரம் யோசித்து, அரசனின் அறைக்குள் செல்ல திட்டம் ஒன்று தீட்டினான். சிருங்கி சாபமிட்ட ஏழாவது நாள்தான் அவனுக்கு அந்த யோசனை தோன்றியது. அவன் அவசரமாகச் சில நாகலோகவாசிகளை அழைத்து, அவர்களுக்குச் சில கட்டளைகளிட்டான்.

"அரசனை நன்கு பாதுகாத்துவருகிறார்கள். நாம் தந்திரத்தால்தான் நமது நோக்கத்தை நிறைவேற்றமுடியும்" என்று எச்சரித்தான்.

இதனிடையில் பரீட்சித்து மன்னனும் அவன் குடும்பத்தாரும் மந்திரிமார்களும், ஏழு நாளில் ஆறு நாள் நல்லபடியாகக் கழிந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஏழாவது நாளும் இதோ முடியப்போகிறது. இன்று மாலை சூரியன் மறைந்ததும் ஏழு நாள் பூர்த்தியாகிவிடும். அதற்கும் சில நாழிகைப் பொழுதுதான் இருக்கிறது. காசியபர் ஏன் வரவில்லை’ என்று அரசனுக்குப் புரியவில்லை. இருந்தாலும் நல்ல காலமாக, ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதால், காசியபர் வந்துதானாக வேண்டும் என்பதில்லை. இப்படி அரசன் நினைத்துக்கொண்டிருக்கையில் மாலை மங்கும் நேரத்தில், ஏழெட்டு துறவிகள் ஒற்றைத் தூண் அருகே வந்தார்கள். "நெடுந்தூரத்திலிருந்து வருகிருேம். அரசனுக்குப் பழமும் மலர்களும் கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்கள்

 காவலாளிகள் அந்தத் துறவிகளின் உடலிலோ உடையிலோ பூச்சி புழு ஒன்றும் இல்லையே என்று கவனமாகப் பார்த்தபிறகு அரசனிடம் அனுப்பினர்.