பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காததுாரம் மேகங்களை அலையவைக்கும் காற்றைப்போல் அவைவிரையவேண்டும். கிருஷ்ணனுக்கும் சில ஆயுதங்கள் தேவை. இவற்றை எங்களுக்கு நீ தர முடிந்தால், நாங்கள் உனக்குக் காண்டவ வனத்தைத் தின்னுவதற்கு ஏற்ற பக்குவத்தில் தருகிறோம்.’’

'கிருஷ்ணனுக்குச் சக்கரம்தான் தேவை. அதை நானே தருகிறேன்’ என்றான் அக்னி. ‘அர்ச்சுனா, உனக்குத் தேவையான ஆயுதங்களைத் தரும்படி வருணனிடம் சொல்கிறேன்

கிருஷ்ணனுக்குச் சக்கராயுதம் கிடைத்தது. அதன் முனை கூராக இருந்தது. நடுவில் இருந்த துளை அவரது வலது கைச் சுட்டுவிரலுக்குச் சரியாக இருந்தது. அதை அவர் வீசினால் போதும். எதிரியின் தலையை அலட்சியமாகக் கொய்துவிட்டு மீண்டும் அவரிடமே திரும்பிவிடும்.

வருணனின் அற்புதமான வில்லையும் மாய அம்பறாத் துணியையும் பெற்றான் அர்ச்சுனன். ஒரு அம்பை எடுத்தால் போதும். சட்டென்று உடனே ஒரு புதிய அம்பு அந்தப் பெட்டியில் தோன்றிவிடும். உலகங்களை அமைத்த விசுவ கர்மா அர்ச்சுனனுக்கு ஒரு ரதத்தை அமைத்துக் கொடுத்தார். தங்கத்தால் கடிவாளம் கொண்ட வெண் குதிரைகள் அந்த ரதத்தை இழுத்தன. இவை தவிர அர்ச்சுனனுக்கு வருணன் ஒரு பெரிய கதையையும் கொடுத்தான். அதை வீசினால் இடி இடிப்பதுபோல் இருக்கும்.

அர்ச்சுனன் கவசம் அணிந்தான். இடுப்பில் வாளை எடுத்துச் செருகிக்கொண்டான். கையிலே தோல் உறைகளை மாட்டிக்கொண்டான். வில்லிலே நாண் ஏற்றினான். ரதம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, அக்னியிடம் சொன்னான்:

'நாங்கள் தயார், நீ காட்டைச் சுற்றிப் பார். கிருஷ்ணனும் நானும் ஆயத்தமாகிறோம். காண்டவ வனத்தை நன்றாகத் தின்னத் தொடங்கு’ என்றான். அக்னிதேவன் சீறிக்கொண்டு காண்டவ வனத்தைத் சூழ்ந்தான். கிருஷ்ணனும் அர்ச்சுனனும் தரையிலிருந்து வானில் உயர்ந்து, காட்டின் அடர்ந்த பசுமையின்மீது அந்தரத்தில் நின்றார்கள்.

காட்டிலே பெரிதும் சிறிதுமான நூற்றுக்கணக்கான ஜந்துக்கள். பலவகை வண்ணங்கள்; பலவகை வடிவங்கள்.