பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 எப்போதும் உனக்கு உண்டு. உன் தைரியம் உன்னையும் சத்தியவானையும் காப்பாற்றுவதாக!" என்று புன்சிரிப்புடன் வாழ்த்துக் கூறினார்.

அந்த அழகிய அரசகுமாரி அவ்விடம் விட்டு அகன்றதும் அசுவபதி பெருமூச்செறிந்தார். "இவள் ஓர் ஆணாகப் பிறக்காமல் போய்விட்டாள். ஓர் ஆணுக்கு வேண்டிய புத்திசாலித்தனமும் சாதுரியமும் இவளிடம் நிறைய இருக்கின்றன. ஆனாலும் இப்போது இவளது துருதுருப்பே இவளுக்கு ஒரு தடையாக இருக்கப்போகிறது” என்றார்.

"அசுவபதி, இந்த விஷயங்களில், நாம் பழங்காலத்து மனிதரைப் போல் இருக்கக்கூடாது. ஆண்களைப் போலவே பெண்களும் சொந்தமாகச் சிந்தித்து முடிவு எடுப்பது அவசியம். பெண்கள் என்றால் மட்டமா என்ன?" என்று நாரதர் கடிந்துகொண்டார். "எது எப்படியானாலும் சாவித்திரி காட்டிலே நல்லபடியாக வாழுவாள். விறகுவெட்டியான கணவனுக்கும் பார்வை தெரியாத மாமனாருக்கும் பக்திமிகுந்த மாமியாருக்கும் பணிவிடை செய்து மகிழுவாள்" என்றார்.

சாவித்திரி சத்தியவானே மணந்து மகிழ்ச்சியாகவே இருந்தாள். அரண்மனையைக் காட்டிலும் அந்தக் காட்டு வாழ்க்கை அவள் மனத்துக்கு இன்பமளித்தது. சுதந்திரமாக அவள் இருந்தாள். காலையில் கீச்சு கீச்சு என்று பறவைகள் கத்தும்; பசுக்கள் 'மா, மா' என்று கத்திக் கன்றுகளை அழைக்கும். அப்போதே அவள் எழுந்துவிடுவாள். மாமியாரும் மாமனாரும் அவள்மீது மிகுந்த அன்பு செலுத்தினார்கள். அதனால் தாய் தந்தையர் இல்லாத குறை அவளுக்குத் தெரியவில்லை. அந்தப் பெரியவர்களிடமிருந்து தியானம், நோன்பு முதலியவற்றின் மகிமையை அவள் தெரிந்துகொண்டாள். அறியாப் பெண்ணாக இருந்த அவள், அறிவும் ஆனந்தமும் சுதந்திரமும் கலந்த சூழ்நிலையில் அடக்கமான ஒரு பெண்மணியாக வளர்ந்தாள்.

சத்தியவானுக்கு ஒரு மரண கண்டம் இருக்கிறது என்பதைச் சாவித்திரியும் அவளது மாமியார் மாமனாரும் வெளியே