பக்கம்:எக்கோவின் காதல்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

103

அவன் என்னை ஏவினான். நான் எனது கத்தியை ஏவினேன். நக்கீரன் கொலையுண்டான். நான் கொலைக்காரன் ஆனேன்.

"செய்தி பரவுவதற்கு முன் சென்னையை விட்டுக் கிளம்பினேன். சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன். இங்கு, உன்னை.. யாருக்குப் பெருங்கேட்டை விளைத்தேனோ அவள் தங்கையையே மணந்தேன். அவள் கணவனைக் கொன்று விட்டு அவளுடைய தங்கைக்குக் கணவன் ஆனேன்.

"அவன் அடிக்கடி பாடுகின்ற பாட்டுத்தான் சுயமரியாதைப் பாட்டு. எந்த மேடையிலும் பாடுவான். அதைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாகும். இப்பொழுது அந்தப் பாட்டைக் கேட்கும் பொழுது கொலை நினைவு வந்து விடுகிறது. அதனால் தான் அதைப் பாடவேண்டாம் என்கிறேன். அன்று பாரதிதாசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பாதியில் எழுந்துவரக் காரணமும் இதுதான்.

'இப்பொழுதுதான் உணருகிறேன்’ கருத்துவேற்றுமைக்காக மனிதத் தன்மையை இழந்தோமே என்று.அதிலும் பிறன் ஏவலால் அறிவையிழந்து இந்தக் கொடுஞ்செயலைச் செய்துவிட்டேனே! இன்னும் என்னைப் போல எத்துணைப்பேர் தமிழகத்தில் இருக்கிறார்களோ? இனப்பற்று என்றுதான் வருமோ?

"கமலம்! உன் குடும்பத்தாருக்கும் உன் அக்காளுக்கும் இத்தகைய பெருந்தீங்கை இழைத்த என்னை மன்னிப்பாயா?” என்று கதறிவிட்டேன்.

அவள் அங்கிருந்தாலல்வா என்னை மன்னிக்க முடியும்?

¤¤¤