பக்கம்:எக்கோவின் காதல்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
அணைந்த விளக்கு

 அவள் என் குடும்ப விளக்காக விளங்குவாள் என்று எண்ணினேன். ஆனால், அவள் அணைந்த விளக்கு. இருந்தாலும் பரவாயில்லை, மீண்டும் ஒளி பெறச் செய்யலாம் என்று எண்ணினேன். அந்த ஆசையையும் அணைத்து விட்டாள்.

வழக்கம் போல் திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் சென்றேன். நெடுநேரம் ஆகியும் அவள் வரவில்லை. வேறு இடங்களிலும் உட்காரமாட்டாள். ஒரு மாதமாக இதே இடந்தான். நானும் அதற்கு அருகிலேயே பதிவு செய்து கொண்டேன். ஆனால், இன்று இன்னும் வரவில்லை. அவளைப் பார்க்காவிட்டால் அந்த நாள் என் வாழ்நாளில் பாழ்நாள்! அவ்வளவு துன்பமாக இருந்தது. கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். மஞ்சட்கதிர்களை மணற்பரப்பில் செலுத்திக் கொண்டிருக்கும் காட்சி மனத்திற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்து கொண்டிருந்தது. இருந்தாலும் இருள் கவிந்து விட்டால் அவள் வரமாட்டாளே என்ற கவலை மிகுதி எனக்கு. ஆனால், கவலை ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. அவள் வந்து விட்ட காரணத்தால் சிவந்த மேனியில் கருப்பு நிற உடை ஒர் தனி அழகு தந்தது, அவளுக்கு.