பக்கம்:எக்கோவின் காதல்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

'கண்ணப்பன் என்ற சொல் காதில் விழுந்ததும் சட்டென்று நின்றுவிட்டான். உற்றுக் கேட்டான்.

“கண்ணப்பன் நம் கூட்டத்திலே அவமானச் சின்னம்! பெரிய அசடு.”

இச்சொற்கள் அவன் செவியில் விழுந்தன. விழுந்ததும் தலை 'கிர்' எனச் சுழல்வதுபோல இருந்தது அவனுக்கு. அவனால் அங்கு நிற்க முடியவில்லை . 'விர்' என்று கீழே இறங்கி விட்டான்.

'அவமானச் சின்னம்' 'அவமானச் சின்னம்'

இச்சொற்கள் அவன் உள்ளத்தை அழுத்திக் கொண்டன. மூளையை இறுகப் பற்றிக் கொண்டன. அடிக்கடி அச்சொற்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

"அவமானச் சின்னம் ! நானா அவமானச் சின்னம்? ஏன்? அவர்களையே போய்க் கேட்டு விடலாமா? சேச்சே! வேண்டாம். அவர்களைக் கேட்கக்கூடாது. அவர்கள் என் உண்மை நண்பர்களாயிற்றே! அப்படியிருந்தும் என்னை அவமானச் சின்னம் என்று ஏன் கூறினார்கள்? வேறு யாரையும் சொல்லியிருப்பார்களோ? இல்லை என் பெயரைச் சொன்னது நன்றாக என் காதில் விழுந்ததே” என்ற எண்ண அலைகள் அவன் நெஞ்சத்தில் விடாமல் மோதிக்கொண்டிருந்தன. பித்துப் பிடித்தவன் போல் நடந்துகொண்டிருந்தான். எதிரில் வருவார் போவாரையும் கவனியாது வீட்டையடைந்தான். “கண்ணப்பா!. கண்ணப்பா!” பேச்சில்லை.