பக்கம்:எக்கோவின் காதல்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்


மனம் சகிக்குமா? உண்மையைச் சொல்லப்பா! என்னிடம் ஒளிக்கலாமா?” என்று கெஞ்சிக் குழைந்து தாயன்போடு பரிந்து கேட்டாள். அவனால் இனி விடை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“வேறொன்றுமில்லையம்மா. கல்லூரியில் எனக்கும் என் நண்பர்களுக்கும் கொஞ்சம் மனத்தாங்கல் அவ்வளவுதான்”.

“மனத் தாங்கலா? ஏன் ? நண்பர்களோடு சச்சரவாயிருந்தால் இதற்காக இவ்வளவு கவலைப்படுவதா? பைத்தியக்காரப் பிள்ளையாயிருக்கிறாயே? வா! எழுந்திரு சாப்பிடலாம்!”

“இல்லையம்மா. அவர்கள் சொன்ன சொற்கள் என் மனத்தை இவ்வளவு வாட்டுகின்றன. என்னை ‘அவமானச் சின்னம்’ என்று சொன்னார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள் என்பதும் தெரியவில்லை. அதனால் எனக்குச் சொல்ல முடியாத துயரமாக இருக்கிறது. சொன்னவர்கள் வேறு யாருமில்லை. என்னுடன் உண்மையாக உள்ளத்தைவ்ட்டுப் பழகும் தோழர்கள் தாம் அவ்வாறு சொன்னது” என்று சொல்லிக் கொண்டேயிருந்த கண்ணப்பன், தாயின் கண்கள் நீரைச் சிந்திக்கொண்டிருப்பதைக் கண்டு விட்டான்.

அம்மா! என்ன இது! ஏன் அழுகின்றீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஆம். நீ’ அவமானச் சின்னந்தான். ஒரு விதவையின் பிள்ளை. சாதிகெட்டவள் பிள்ளை. அப்படிப்பட்ட உன்னை அவமானச் சின்னம் என்று தானே சொல்லும் இந்த உலகம். அதற்காக ஏன் கவலைப்படுகிறாய்? கவலைப்பட்டால் அந்தப் பழி மறைந்துவிடுமா? எல்லாம் நம் தலை விதி!”