பக்கம்:எக்கோவின் காதல்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖ கவியரசர் முடியரசன்

149

பிச்சைக்காரி அந்தக் காரில் அடிபட்டு விழுந்தாள். கையிலிருந்த குழந்தை கடகடவென உருண்டது. அவளுக்குப் பலமான அடி பட்டதால் இரத்தம் பெருக்கெடுத்தோடியது. அவள் மயங்கிக் கிடந்தாள். காரில் இருந்தவர்கள், நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் எல்லோரும் ஓடி அவளைச் சுற்றி வேடிக்கை பார்த்தார்கள். உட்கார்ந்து கொண்டிருந்த அரங்கசாமியும் ஓடினான். அதற்குள் பக்கத்திலிருந்த போலீசு வந்து கூட்டத்தை ஒதுக்கிக்கொண்டிருந்தது. சிலர் அவளைத் திட்டினார்கள். சிலர் காரோட்டியைப் பேசினார்கள். இன்னும் சிலர் 'அவள் விதி அவ்வளவுதான்' என்று வேதாந்தம் பேசினர். 'பிச்சைக்காரிதானே! போகட்டும், என்ன குடிமுழுகிப்போகிறது' என்று பேசிக்கொண்டனர் சிலர்.

அனாதையான - ஏழையின் உயிருக்கு உண்மையில் இரங்குபவர்கள் எங்கேயிருக்கப்போகிறார்கள்? உயிரில் கூட, பணக்கார உயிர் - ஏழையின் உயிர் என்ற வேறுபாடு உண்டாகிறதே! துன்பம் பணக்காரனுக்கு ஒருமாதிரியும் ஏழைக்கு ஒருமாதிரியுமா வேதனை தருகிறது? எங்குத் துன்பம் தோன்றினாலும் மனிதன் என்ற முறையில் கண்ணோட்டம் செலுத்துவதுதானே மனிதத் தன்மை. ஆனால் அந்தத் தன்மைதான் மறைந்து போய் விட்டதே!

'போலீசு' தான் என்ன செய்யப்போகிறது? அவள் இறந்தாள். 'போலீசு' காரோட்டிக்குத் தண்டனை தரும்; அல்லது விட்டு விடவும் செய்யும். ஆனால் அவளுக்குப்பின் அந்தக் குழந்தைக்குக் கண்காணிப்பு யார்? அதையல்லவா கவனிக்கவேண்டும்! கடைசியில் அதுவும் பிச்சையெடுத்துத் தான் வாழவேண்டும். அந்தக் குழந்தையும் எதிர்காலப்