பக்கம்:எக்கோவின் காதல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

35

எதற்கிருக்கிறது? ம்ம், அதை ஏன் நாம் குறைகூற வேண்டும்? மக்கள் உணர்ந்தால் - அறிவுபெற்றால் தானாகவே எல்லாம் மாறுகிறது. சரி, நீங்கள் போகலாம்; மகிழ்ச்சியோடு விடை தருகிறேன். உங்கள் பணியை நான் மேற்கொள்கிறேன். விரைவில் நானும் உங்களைச் சந்திப்பேன். தன் கணவன் குற்றமற்றவன் என்று, முடியுடை வேந்தன் எனவும் பாராது வீரத்தோடு வாதாடிய கண்ணகி என் குலத்தில் பிறந்தவள் தான். மக்கள் மன்றம் இருக்கவே இருக்கிறது. அரசாங்கத்தை அந்த மன்றத்தின் கூண்டிலே நிறுத்துகிறேன். நீதிதேவன் தீர்ப்பளிக்கட்டும் - என்று சொல்லி முடித்தாள். முகம் சிவந்திருந்தது. உதடுகள் துடித்தன.

மல்லிகா! உன் நெஞ்சமும் இரும்பாகட்டும். உங்களுக்குக் காதல் இல்லையா என்று கேட்டாயே! இதோ என் காதல் பலித்துவிட்டது. என் காதல் எல்லாம் நாட்டின் விடுதலை மீதுதான். நாட்டுக்காக உழைக்க வேண்டும் - உழைத்து உழைத்து உருமாற வேண்டும். அதற்காக நான் இரத்தம் சிந்த வேண்டும் - அந்த இரத்தம் மக்கள் வாழ்வு மலர்வதற்கு நீராக வேண்டும். நான் எதிரியால் தாக்கப்பட்டோ, அரசாங்கத்தின் தண்டனை பெற்றோ சாகவேண்டும். அந்தச் சாதல்தான் என்காதல், அந்தக் காதல் பலித்துவிட்டது. அந்தக் காதலிதான் இந்தத் துரதர்களை அனுப்பியிருக்கிறாள். நான் அவளைக் கண்டு பேசி மகிழப் போகிறேன், நீயும் விரும்பினால் அவளை ஒருநாள் வந்து பார்! நான் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, அச்சம் ஒரு சிறிதுமின்றி வீரனைப் போலச் செம்மாந்து சென்றான்.

போலீசாரும் அவனுடன் புறப்பட்டுச் சென்றனர்.

மறுநாள் காலை செய்தித்தாளுடன் ஓடி வந்தாள் மல்லிகாவின் தங்கை மஞ்சுளா.