பக்கம்:எக்கோவின் காதல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

47

வருகிறாள் - சத்தம் மேல் படிக்கு வந்துவிட்டது. படிச்சத்தமும் நின்றுவிட்டது. சரி, வந்துவிட்டாள். நாம் உறங்குவது போல் பாசாங்கு செய்யலாம். நம்மை எப்படி எழுப்புகிறாள் பார்ப்போம் என்று எண்ணிக் கண்களை மூடிக் கொண்டேன். சத்தம் அருகில் கேட்டது. என் துடிப்பு மிக வேகமாயிருந்தது. ஆனால் அவள் என்னை எழுப்பவில்லை. என்னால் அதற்கு மேல் பொறுத்திருக்க முடியவில்லை. நாமே ...... என்று கண்விழித்தேன்.

'உஸ்ஸ் - உஸ்ஸ்' சத்தங் கேட்டது. அன்புக்காகத் துடித்த துடிப்பு. அச்சத் துடிப்பாக மாறியது. திரும்பினேன். அந்தப் பழைய வெள்ளை உருவம் தெரிந்தது. அசைந்து அசைந்து ஆடியது. இடையிடையே 'உஸ்ஸ்' சத்தம். திடீரென்று வெள்ளை உருவம் கீழே உட்கார்ந்தது. மனம் பதறியது. உடல் நடுங்கியது. எழுந்து 'லைட்' போட நடந்தேன். மூன்றே மூன்று அடிதான் கால் வைத்திருப்பேன். என் மேல் ஓர் உடம்பு மோதியது. அய்யோ என்றலறிக் கீழே சாய்ந்து விட்டேன். உடனே பட்டப்பகல் போல வெளிச்சம் தெரிந்தது. 'எலக்ட்ரிக் ஸ்விட்ச்'சிலிருந்து கையை எடுத்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா

'ஏன் இப்படிச் சத்தம் போட்டீர்கள்?’ என்று மெதுவான குரலிற் கேட்டாள்.

'ஒன்றுமில்லை' என்று சொல்லிவிட்டு வெள்ளை உருவம் உட்கார்ந்த பக்கம் பார்த்தேன். ஒன்றையுங் காணவில்லை. ஆனால் அந்த இடத்தில் ஒரு வேட்டி கிடந்தது. அப்பொழுதுதான் உண்மைப் 'பேயை'க் கண்டுபிடித்தேன். அந்த மூலையில் கொடியிற் காய்ந்து கொண்டிருந்த வேட்டி காற்றில் அசைந்தது, அஞ்சிய என் கண்ணுக்கு ஒர் உருவமாகப்