பக்கம்:எக்கோவின் காதல்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

77

“என்ன துணிச்சல்! இனி அவள் உன் மனைவியா?.... சிங்கப்பூருக்கா செல்கிறாய். வேண்டாம். நானே உங்களைச் சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன்” என்று துடிதுடித்துக் கொண்டு சந்தடி செய்யாமல் அறைக்குச் சென்று கைத் துப்பாக்கியை எடுத்து வந்தார்.

மகன் அறையில் ஒரு சன்னல் கதவு சிறிது திறந்திருப்பதைப் பார்த்தார். அதன் வழியாக உள்ளே பார்த்தார். அவர் கண்கள் கூசின. நெஞ்சு வெடித்து விடும்போல இருந்தது.

துப்பாக்கியை நீட்டினார். கண்களை மூடிக் கொண்டார். விசையைத் தட்டினார். “படார் படார்” என்ற சத்தம். குறி தவறி அங்கிருந்த நிலைக் கண்ணாடியில் பட்டது.

எங்கும் ஒரே வெளிச்சம். மாடியிலிருந்து ஓடி வந்தாள் மங்களம். துப்பாக்கியை மறைத்துக் கொண்டு பித்தன் போல் நின்று கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். “என்ன இது? ஏன் இப்படி நிற்கிறீர்கள்? என்ன சத்தம்?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

அவளைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“அப்படியானால் உள்ளே நம்மால் சுடப்பட்டது யார்?” இது முதலியார் பெருமூச்சோடு கலந்து வந்த அய்யம்.

மகனும் கதவைத் திறந்து கொண்ட வந்து இதென்ன அப்பா என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

ஒன்றும் பேசவில்லை .